மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:


1660 சிறப்பு பயிற்றுநர்கள்


’’தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தில் பணியாற்றி வரும் 1660 சிறப்பு பயிற்றுநர்கள் பணி நிரந்தரம் கோரி சென்னையில் இன்று காலை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை பா.ம.க. ஆதரிக்கிறது.


மாற்றுத் திறன் மாணவர்கள் 1.30 லட்சம் பேருக்கு பயிற்றுவிப்பதுதான் இவர்களின் பணியாகும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவை செய்வது எளிதான விஷயமல்ல. கூடுதல் கவனமும், சகிப்புத் தன்மையும் அவசியமாகும். ஆனால், அதற்கேற்ற ஊதியம், சமூகப் பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை.


பணிநிரந்தரம்


1998 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்கள், பணி நிலைப்பு கோரி கடந்த  15 ஆண்டுகளில் 8 முறை  உண்ணாநிலை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.


மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவையை  அங்கீகரிக்கும் வகையில் அவர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும். பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும்’’.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவது மிகவும் கடினமான விஷயமாகும். இதைக் கருத்தில் கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்புக் கல்வி, இயன்முறைப் பயிற்சி, ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்க சிறப்புப் பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், பகல்நேர பாதுகாப்பு மையப் பாதுகாவலர்கள், உதவியாளர்கள் ஆகியோர் கடந்த 1998 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர்.


தொடக்கத்தில் மாவட்ட தொடக்கக் கல்வித் திட்டத்தின் அங்கமாக நியமிக்கப்பட்ட இவர்கள், பின்னர் 2002 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு மாற்றப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணியாற்றி வரும் போதிலும் இவர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.


மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்றுநர்களும், பிற பணியாளர்களும் ஆற்றும் பணி போற்றத்தக்கது. அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவையை பாராட்டி அங்கீகரிக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், அவர்களுக்கு கவுரமான ஊதியமும், உரிமைகளும் கூட வழங்க தமிழக அரசு மறுத்து வருவது வேதனை அளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் பிற பணியாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும்.


பணி நிரந்தரம், சமூகப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்; அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.