இடைதேர்தல்:


கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். இதையடுத்து, அந்த தொகுதிக்கான இடைதேர்தலை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, பிப்.27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.


வேட்பாளரை அறிவித்த திமுக+:


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி தான் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தீவிர பரப்புரையை கூட தொடங்கி விட்டன.


தொடர்ந்து ஆலோசிக்கும் அதிமுக:


இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்ட பிறகும், இதுவரை வேட்பாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தரப்பு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. யாரை வேட்பாளராக தேர்வு செய்வது, ஒருவேளை ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளரை அறிவித்து இருவரும் இரட்டை சிலை சின்னத்தை கேட்டால், சின்னம் முடங்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.


ஈபிஎஸ்-ன் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியும் காலவதியாகிவிட்டதால், கட்சி சின்னத்தை ஒதுக்க அவரால் பரிந்துரைக்க முடியாது என கூறப்படுகிறது.  ஓபிஎஸ் தரப்போ பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம், இல்லையென்றால் தனி வேட்பாளரை களமிறக்குவோம் என அறிவித்துள்ளது. இதனால், இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும், இருதரப்பு மோதலால் சின்னம் முடங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை:


இந்நிலையில், இடைதேர்தலில் அதிமுகவின் வேட்புமனுவைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி ஈ.பி.எஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை, தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.


இடைக்கால நிவாரணம் கிடைக்குமா?


ஈபிஎஸ் தரப்பிலான அந்த மனுவில்,  பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ஈரோடு இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏதுவாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாள் உள்ளிட்ட தேதிகளைக் கேட்டறிந்த நீதிபதிகள் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளுக்குள் உத்தரவுகள் வரவில்லை என்றால் இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.


எழுத்துப்பூர்வ முறையீட்டுக் கோரிக்கை வழங்கவும், மீண்டும் திங்கட்கிழமை முறையீடு செய்யவும் ஈபிஎஸ் தரப்பை அறிவுறுத்தியுள்ளனர். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைதேர்தலை கருத்தில் கொண்டு,  அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.