தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக மீணடும் ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. திமுக-வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது.
தீவிர வாக்கு சேகரிப்பில் எடப்பாடி:
சட்டமன்ற தேர்தலுக்காக மற்ற அரசியல் தலைவர்களுக்கு முன்பே அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, பாஜக-வுடனும் கூட்டணி சேர்ந்துள்ளார். கூட்டணியில் அமமுக, தமாக ஆகிய கட்சிகள் இருந்தாலும் பாமக உள்ளிட்ட கட்சிகளையும் உள்ளே கொண்டு வர ஆர்வம் காட்டி வருகிறார்.
கூட்டணி கட்சிகள் ஒருபக்கம் இருந்தாலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதே தன்னுடைய ஆதிக்கத்தை அதிமுக-வில் நிலைநிறுத்தும் என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்துள்ளார். இதனால், மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் தீவிரமாக பணியாற்றும்படி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டச் செயலாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு:
அதிமுக-விற்கு மொத்தம் 82 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இதில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும் 3 முதல் 6 தொகுதிகள் வரை அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வரும். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறைந்தது 2 தொகுதிகளில் கட்டாயம் அதிமுக வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அவ்வாறு ஒரு மாவட்டச் செயலாளர் 2 தொகுதியை உறுதி செய்தால் மீண்டும் தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கணித்துள்ளார். பாஜக-வுடன் கூட்டணி வைத்திருந்தாலும் கூட்டணி ஆட்சி என்று அவ்வப்போது பாஜக குடைச்சல் தருவதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக முழுமையாக சென்றபிறகு இதுவரை அதிமுக பெரிய வெற்றியை தேர்தலில் வெற்றி பெறவில்லை.
இபிஎஸ்-க்கு சவால்?
இதனால், வரும் தேர்தல் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு சவால் விடும் வகையில் வரும் தேர்தல் மாறியுள்ளது. இதனால், கட்டாய வெற்றி நெருக்கடி அதிமுக-வை வழிநடத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டாகியுள்ளது.
திமுக-வின் வலுவான கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகளின் போட்டி, பாஜக-வுடன் கூட்டணி வைத்ததற்கான எதிர்ப்பு மன நிலை, ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு ஆகியவற்றை கடந்து எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் அதிமுக-வை வெற்றி பெற வைக்கவே ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கை கொடுக்குமா?
மேலும், சில மாவட்டச் செயலாளர்கள் அதாவது முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வெற்றி பெற்றால் மட்டுமே போதும் என்று கருதுவதால், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள மற்ற தொகுதியில் அதிமுக வெற்றிக்கு அவர்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவும் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த வியூகம் அரசியல் களத்தில் அவருக்கு கைகொடுக்குமா? என்பது அடுத்தாண்டு தெரியவரும்.