திருச்சியில் பட்டப்பகலில் பேராசிரியையை தாக்கி நடந்த கொள்ளை சம்பவத்திற்காக, தமிழக அரசை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.


எடப்பாடி பழனிசாமி டிவீட்:


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “திருச்சியில் நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணை தாக்கி, நடுரோட்டில் தரதரவென இழுத்து சென்று,பட்டபகலில் வழிப்பறி செய்திருப்பது நெஞ்சை பதற வைக்கிறது, யார்க்கும்-எதற்கும் அஞ்சோம் எனும் மனநிலையில் தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளது,  ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தது போல் தமிழ்நாட்டில் எது நடந்தாலும், சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்து போனாலும், விளம்பர அரசியல் செய்யும் விடியா அரசின் முதல்வரின் காதுகளுக்கு மட்டும் அது எட்டுவதே இல்லை என்பது வேதனைக்குரியது” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, சம்பவம் தொடர்பான வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.


பட்டப்பகலில் நடந்த கொள்ளை:


திருச்சி வ.உ.சி. சாலை கேலக்சி டவர் பகுதியில் வசித்து வரும் பாண்டியன் என்பவரது மனைவி சீதாலட்சுமி. அவருக்கு வயது 53. பேராசிரியையான இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.சி. துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.  மாலை நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது இருசக்கர வாகனத்தை  நிறுத்திவிட்டு அங்குள்ள மைதானத்தில் நடைப்பயிற்சி செல்வது சீதாலட்சுமியின் வழக்கம். 


அதேபோல் கடந்த 12-ந்தேதி மாலை அவர் நடைப்பயிற்சி முடித்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை எடுக்க வந்துள்ளார். அப்போது, அங்கு இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த மரக்கட்டையால் சீதாலட்சுமியின் தலையில் தாக்கியதில், அவர் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே, அந்த நபர் பேராசிரியையின் கால்களை பிடித்து சாலையிலேயே தர, தரவென இழுத்துச்சென்று அருகில் இருந்த சுவற்றில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு அவரது வாகனத்தையும், செல்போனையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார். இதனிடையே சுயநினைவிற்கு வந்த  பேராசிரியை சீதாலட்சுமி சம்பவம் தொடர்பாக கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார்.


குற்றவாளி கைது:


அதன்பேரில்  வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் பேராசிரியையை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டது தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பழமனேரியை சேர்ந்த செந்தில்குமார் என்பது உறுதியானது. மேலும், குடிபோதை மற்றும் கஞ்சாவுக்கு அடிமையான செந்தில்குமார், தற்போது திருச்சி காந்திமார்க்கெட் தாராநல்லூர் கீரைக்கடை பஜார் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை போலீசார் தேடி வந்தனர்.


இடதுகால் முறிவு


இந்நிலையில், செந்தில்குமார் தாராநல்லூர் பகுதியில் செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று செந்தில்குமாரை பிடிக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும், பேராசிரியையிடம் கொள்ளையடித்த ஸ்கூட்டரில் அதிவேகமாக சென்றார். அப்போது, சாலையின் மையத்தடுப்பில் மோதி ஸ்கூட்டருடன் அவர் கீழே விழுந்தார். இதில் அவருடைய இடதுகால் உடைந்தது. இதைத்தொடர்ந்து அவரை மீட்ட போலீசார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் செந்தில்குமாரிடம் இருந்து சீதாலட்சுமியின் ஸ்கூட்டர், செல்போனை போலீசார் மீட்டனர்.