உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலின் நிர்வாகமானது திருப்பதி தேவஸ்தானம். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு சீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், நாட்டிலே முதன்முறையாக ஆந்திராவை தவிர்த்து வெளிமாநிலத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட திட்டமிடப்பட்டது.
இதையடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு வந்தது. ஆலய திருப்பணிகள் முற்றிலம் நிறைவடைந்தது. இந்த நிலையில், பத்மாவதி தாயார் கோவில் மஹாகும்பாபிஷேகம் இன்று நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில் தி.நகர் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
கடந்த 12-ந் தேதி முதல் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் ராஜகோபுரத்தில் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து, காலை 10 மணி முதல் 11 மணிக்கள் பத்மாவதி தாயார் – சீனிவாசா திருக்கல்யாணம் நடக்கிறது.
திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சாம்பார் சாதம், ரச சாதம், தயிர்சாதம், பொங்கல், வெஜ் பிரியாணி என அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கோவிலின் எதிரே பிரத்யேகமாக இதற்கென ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவசமாக 15 ஆயிரம் திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. பத்மாவதி தாயார் கோவிலில் காட்சி தரும் பத்மாவதி தாயார் சிலை திருப்பதியில் செய்யப்பட்டது ஆகும். முன்னதாக, நேற்று காலையில் பத்மாவதி தாயார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை சதுசதனா அர்ச்சனை, மகாசாந்தி ஹோமம் பூர்ணாஹூதி, கும்ப உத்தப்பன, ஆலய பிரக்தஷனா, சம்பாத்ஜய சபர்ஷனம் ஆகியவை நடந்த பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட பலரும் பங்கேற்றனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. மேலும், இரவு 7.30 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த கோவில் கட்டப்பட்டுள்ள இடமானது பழம்பெரும் நடிகை காஞ்சனாவின் குடும்பத்தினர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முதல் 3 நாட்கள் முதல் மனைவியுடன், அடுத்த மூன்று நாட்கள் மற்றொருவருடன்.. அக்ரிமெண்ட் போட்ட பெண்கள்
மேலும் படிக்க: PM Modi Factcheck : பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? நோபல் பரிசு பரிந்துரை குழுவின் துணைத் தலைவர் பேசியது இதுதான்..!0