திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான பொன்முடியின் சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கம் செய்துள்ளது. குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.


பொன்முடிக்கு தொடர் நெருக்கடி: பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான  கவுதம சிகாமணிக்கு சொந்தமான சொத்துகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 


கடந்த 2021ம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும், அக்கட்சியின் மூத்த தலைவரான பொன்முடி உயர்கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். இவருக்கு சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு இறுதியில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


அமைச்சர்களுக்கு குறிவைக்கும் அமலக்காத்துறை: இதனால், அவரது அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவிகள் பறிக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடினார். விசாரணையின் அடிப்படையில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இதன் காரணமாக, அமைச்சரவையில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளிய வழக்கில் அமலாக்கத்துறை நெருக்கடி தர தொடங்கியுள்ளது. ஏற்கனவே, பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. 


தற்போது, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், மற்றொரு அமைச்சருக்கு அமலாக்கத்துறையால் சிக்கல் எழுந்துள்ளது.