சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ.2.5 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரில், புகார் தெரிவித்த மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் தீன தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா திட்டத்தின் கீழ் நடைபெற்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வந்தது. இந்தத் திறன் மேம்பாட்டு பயிற்சியில் ரூ. 2.5 கோடி முறைகேடு நடந்ததாக இத்திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் மற்றும் தேசிய பழங்குடியினர், ஆதிதிராவிடர் நல ஆணையத்திடம் புகார் அளித்தனர். 



இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல், இத்திட்டத்தின் பொறுப்பாளர் சசிகுமார் உள்ளிட்ட பேராசிரியர்கள் சிலர் மத்திய அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் அளித்த புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அதன் அறிக்கையை வரும் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் புகார் அளித்த மாணவர்கள் 13 பேரும் முறைகேடு தொடர்பான ஆவணங்களுடன் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு முறைப்படி அழைப்பாணை விடுக்கப்பட்டது. 



அதன் பேரில் 11 மாணவர்கள் இன்றைய தினம் சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் 11 மாணவர்களிடம் கூட்டு விசாரணை நடத்தினர். பின்னர் ஒவ்வொரு மாணவர்களாக தனித்தனியே சூரமங்கலம் உதவி ஆணையாளர் விசாரணை நடத்தினார். பெரியார் பல்கலைக்கழகத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்களிடம் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.


அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை 


மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை முழுவதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் தங்கவேல் மற்றும் இத்திட்டத்தில் பணிபுரிந்த அனைத்து நிலை அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என சேலம் மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.