கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையில் இருந்து 1.20 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு தமிழகத்திற்கு வந்து கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு 68,032 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை இன்னும் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீரானது அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரி நீராக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதேபோன்று கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு 19,250 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த 10 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடி உயர்ந்துள்ளது. இன்று மாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 68 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதேபோன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.23 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 57.62 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று இரவு அல்லது நாளை காலை மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



தொடர்ந்து, ஓரிரு நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து அணையின் முழு கொள்ளளமான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும். எனவே காவிரி கரையோரத்தில் உள்ள சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலப்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | EVKS Elangovan Exclusive: கார்த்தி சிதம்பரம் சுயநலவாதி; துரோகம் செய்கிறார்- ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி