மற்ற விலங்குகளை காட்டிலும் யானை அறிவுக்கூர்மை அதிகமுள்ள விலங்கு. கூர்மையான அறிவு, நுட்பமான உணர்வு, அதிக நினைவாற்றல் என யானை மற்ற விலங்குகளை விட தனித்து நிற்கிறது. பிரம்மாண்ட உருவம் என்றாலும் பாகன்களிடம் குழந்தை போலவே இருக்கின்றன யானைகள். 


மற்ற உயிர்களை மதிப்பது யானைகள் பிரத்யேக குணம். சமீபத்தில் சாலையில் இறந்து கிடந்த பூனையை தாண்டாமல் ஒரு யானை விலகி நடந்து சென்ற ஒரு வீடியோ வைரலானது. இதுபோல இயற்கையாகவே மற்ற உயிர்களை மதித்து அன்பு செலுத்தும் விலங்காக யானை உள்ளது. அதற்கு மேலும் எடுத்துக்காட்டாய் ஈரோட்டில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.




ஈரோட்டில் உள்ள சத்தியமங்கலத்தில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத்தோப்பு உள்ளது. இந்த வாழைத்தோப்பில் நுழைந்த  காட்டுயானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி கிட்டத்தட்ட 300 மரங்களை உடைத்து தரைமட்டமாக்கியுள்ளன. ஆனால் ஒரு மரத்தை மட்டும் யானைகள் சேதப்படுத்தாமல் விட்டுச்சென்றுள்ளது. அந்த ஒரு குறிப்பிட்ட வாழை மரத்தில் குருவி கூடு கட்டி குருவிக்குஞ்சுகள் இருந்துள்ளது. அதனைக் கண்ட யானைகள் அந்த ஒரு மரத்தை மட்டும் சேதப்படுத்தாமல் சென்றுள்ளன. 





இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா, இதனால்தான் யானைகளை நாம் மரியாதைக்குரிய விலங்கு என்கிறோம். குருவிக்கூடு இருக்கும் மரத்தை தவிர மற்ற மரங்களை சேதப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.