தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வரும் டிச.8-ம் தேதி வரை இந்த பணி ஒரு மாதம் வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்ய உள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.


வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்கள்


வாக்காளர் பட்டியல் திருத்திற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பெற வசதி செய்வது வழக்கம். தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த முகாம்கள் ஒரு மாத காலத்திற்கு செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முகாமிலேயே நேரடியாக படிவங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து வழங்கலாம். வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் சென்று நேரடியாக இந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுமக்கள் இணையதளம் (www.avsp.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 



என்னென்ன மாற்றங்கள் செய்யலாம்


இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுடன் வாக்காளர் பட்டியலில் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கி பயன்பெறலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைத்திட படிவம் 6 பி பூர்த்தி செய்து வழங்கலாம்.


தொடர்புடைய செய்திகள்: பாலே இங்க தேறல.. பாயாசம் கேக்குதா? ஸ்கூல் இருக்கு..! மாணவரின் கேள்விக்கு காமெடியுடன் பதிலளித்த விருதுநகர் கலெக்டர்!


வேலைக்கு செல்பவர்கள் என்ன செய்யலாம்?


இதற்கிடையில், பணிக்குச்செல்வோர் மற்றும் வேலை நாட்களில் வர முடியாதோர் வசதிக்காக, தமிழகம் முழுவதும் சனி மற்றும் ஞாயிறான இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைக்கு செல்பவர்கள் இந்த இரண்டு நாட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.



புதிய வாக்காளர்கள் 


இவை தவிர, இளம் வாக்காளர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 என ஆண்டுக்கு 4 நாட்களை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதற்கான முயற்சியை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்து வருவதன் ஒரு பகுதியாக வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைத்தல் என்ற முக்கியமான பணியும் கூடவே நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து வாக்காளர்களும் தாங்களாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ள மேற்கண்ட சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.