பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி, ’பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (E.W.S.) 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து, வானதி சீனிவாசன் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார். 10 சதவீத இட ஒதுக்கீட்டால், பல பிரிவினர் பயனடைவார்கள் என்று வானதி சீனிவாசன் கூறுகிறார். நான் சவால் விட்டுக் கூறுகிறேன். 10 சதவீத இட ஒதுக்கீட்டால், எந்த ஜாதி அதிகம் பலனடைந்துள்ளது என்பதை புள்ளி விவரங்களோடு வெளியிட பா.ஜ.க. தயாரா? 10 சதவீத இட ஒதுக்கீட்டால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே பலன் பெற்றுள்ளனர்’ என்று ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார்.


பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டால், பிராமணர் சமுதாயம் மட்டுமே பயன் பெறுகிறது என்ற நச்சு பிரசாரத்தை, ஹிட்லர் யூதர்களிடம் காட்டியது போன்ற வெறுப்புணர்வை தனது பேட்டியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோர் என, இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத அனைத்து ஜாதியினரும், இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பலன் பெற முடியும்.


தமிழகத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி.), எஸ்.சி. (அருந்ததியர்), பி.சி. (முஸ்லிம்) என, 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த வரம்புக்குள் வராத சமூகம், பிராமணர் சமூகம் மட்டும் தான் என்று ஆர்.எஸ்.பாரதி கூறுகிறாரா?  சைவ வேளாளர், கார்காத்த வேளாளார், நாஞ்சில் வேளாளர், ஆறுநாட்டு வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார்  என வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு சமூகங்களில் பல பிரிவுகள் என 60-க்கும் அதிகமான ஜாதிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை. இதனை ஆர்.எஸ். பாரதி மறுக்கிறாரா? அல்லது இந்த சமூகங்களுக்கு எல்லாம் இட ஒதுக்கீடு தேவையில்லை. இந்த சமூகங்களில் ஏழைகளே இல்லை, அவர்களெல்லாம் பணக்காரர்கள் என்று கூற வருகிறாரா? என்பதை அவர் விளக்க வேண்டும்.


பா.ஜ.க.வைப் பொறுத்தவரை 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற 'சம நீதி' கொள்கையை தான் பின்பற்றி வருகிறது. பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ஜ.க. எப்போதுமே ஆதரித்து வந்துள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டுருக்கு இட ஒதுக்கீடு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதனை செயல்படுத்தியும் வருகிறது. பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு சதவீதம் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வருகிற சமூகங்கள் எவை என்பது அனைவருக்கும் தெரியும். 69 சதவீத இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூகங்கள் எவ்வளவு என்பது பற்றியும், அவர்களில், உயர் கல்வி பெற்றோர் எத்தனை சதவீதம்? அரசு வேலைவாய்ப்பு பெற்றோர் எத்தனை சதவீதம்? என்பது பற்றிய புள்ளி விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும்.


வேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு போன்ற சமூகங்களில் ஏழைகள், பள்ளிப்படிப்புக்கு மேல் படிக்க முடியாமல், மளிகை கடைகள், ஜவுளி கடைகள் போன்றவற்றில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால், அவர்களில் பலர், 40 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் உள்ளனர். இந்த சமூக அவலங்களுக்கு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காததும் ஒரு காரணமாக உள்ளது. எனவே, தமிழகத்தில் இட ஒதுக்கீடு கிடைக்காத சமூகங்களின் சமூக பொருளாதார நிலை குறித்தும், அவர்களில் உயர் கல்வி பெற்றோர் எத்தனை சதவீதம், அரசு வேலைவாய்ப்பு பெற்றோர் எத்தனை சதவீதம் என்பது பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.  தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, பிராமண வெறுப்புணர்வை விடாமல் வளர்த்து வரும் தி.மு.க., அதற்காக இட ஒதுக்கீடு வரம்புக்குள் வராத 60-க்கும் அதிகமான மற்ற சமூகங்களையும் சேர்த்து பலியிட்டு விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


இட ஒதுக்கீடு, சமூக நீதி பற்றி மற்றவர்களுக்கு, ஒவ்வொரு நாளும் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வினர், தங்களது கட்சித் தலைமை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் பிடியில் சிக்கியிருப்பது பற்றியும், இது சமூக அநீதி இல்லையா என்பது பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 1949-ல் தொடங்கப்பட்ட தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு இதுவரை ஒரு பெண்மணியோ, அல்லது பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரோ வர முடியவில்லை. இனியும் வருவதற்கான அறிகுறியும் இல்லை. இதுதான் சமூக நீதியா என்பதையும் தி.மு.க.வினர் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.