விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும் என்றும், அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் 10 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடத்தப்படுவதால் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் திருவிழா களைகட்டிவருகிறது. 


இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்று கூறினார். மேலும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்புள்ளது. விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வரும் என்றும், அனைவரும் தயாராக இருக்க வேண்டும் எனவும்  பழனிசாமி பேசினார். மேலும், ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம்.எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என்றும் கூறினார்.


 






எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடைபெற்றது என்பது குறித்து தெளிவாக இல்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விலக்குக்காக அதிமுக கொண்டு வந்த அதே தீர்மானத்தையே திமுகவும் கொண்டுவந்துள்ளதாகவும், அதிமுக கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் அதை திமுக அரசு தொடர்கிறது எனவும் கூறினார். திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. 27,003 இடங்களுக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட சுமார் ஒரு லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற செப்டம்பர் 25ஆம் தேதி கடைசி நாளாகும். 


‛பிடிஆர்.,க்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது... மீண்டும் பேசினால்...’ -டிகேஎஸ் இளங்கோவன் பகீர் பேட்டி!