அஜர்பைஜானின் பாகு நகரி நேற்று நடைபெற்ற FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில் டை - பிரேக்கர் சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 3-5-2.5 என்ற புள்ளிக்கணக்கில் உலகின் 3ம் நிலை வீரரான ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 


இந்தநிலையில், இன்று (செவ்வாய் கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொள்ள இருக்கிறார் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா.


நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் புகழ்பெற்ற விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு சென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். 2005 ஆம் ஆண்டு நாக் அவுட் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.






முன்னதாக, பிரக்ஞானந்தா 5-4 என்ற கணக்கில் சகநாட்டவரான அர்ஜூன் எரிகைசியை டை-பிரேக்கில் தோற்கடித்து கடந்த வியாழக்கிழமை அரையிறுதி தகுதிபெற்று சாதனை படைத்தார்.


கார்ல்சென்:


31 வயதான கார்ல்சென் அஜர்பைஜானின் பாகுவில் நடைபெறும் FIDE உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவை எதிர்கொள்கிறார். இருவரும் இன்று ஒரு கிளாசிக்கல் நேரக் கட்டுப்பாடு விளையாட்டையும், புதன்கிழமை மற்றொரு விளையாட்டையும் விளையாடுவார்கள். 


புள்ளிகள் எப்படி கிடைக்கும்..?


செஸ்ஸின் விதிமுறைகள்படி, ஒரு வீரர் வெற்றிக்கு ஒரு புள்ளியையும், சமன் செய்தால் அரை புள்ளியையும் பெறுகிறார். அதே நேரத்தில், தோல்வியுற்ற வீரருக்கு எந்த புள்ளிகளும் கிடைப்பதில்லை. இரண்டு கிளாசிக்கல் கேம்களுக்குப் பிறகு ஸ்கோர் சமமாக இருந்தால், குறுகிய நேரக் கட்டுப்பாடுகளுடன் கூடிய டைபிரேக்குகள் வெற்றியாளர் யார் என்று தீர்மானிக்கப்படும்.






உலகக் கோப்பை எட்டு சுற்றுகளைக் கொண்ட ஒரு கடினமான நாக் அவுட் போட்டியாகும். இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே கார்ல்சென் தகுதிபெற்ற நிலையில், இவர் இறுதிப்போட்டிக்கு வருவதும் இதுவே முதல்முறை.


கார்ல்சென் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் நம்பர் 1 தரவரிசை இடத்தை ஆக்கிரமித்துள்ளார். அதேநேரத்தில், பிரக்ஞானந்தா 2023 உலகக் கோப்பையின்போது முதல் முறையாக தரவரிசை பட்டியலில் முதல் 30 இடங்களை பிடித்தார்.