கோவையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம,ன் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவரை வழியனுப்ப வந்த பாஜக மகளிரணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நேற்று கோவையில் மத்திய நிதி அமைச்சர் பங்கேற்ற கிரெடிட் அவுட்ரீச் விழாவில் ஒரு லட்சம் வங்கி கணக்குகளுக்கு சுமார் 3749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், கோவையின் வேகமான வளர்ச்சிக்கு இந்த கடனுதவி திட்டம் உறுதுணையாக இருக்கும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் முதல்முறையாக இந்த மாபெரும் கடனுதவி திட்டம் கோவையில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் அதிமுக எம்எல்ஏக்கள் தொகுதி சம்பந்தமான விஷயங்களைத் தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கேட்டார்கள் எனவும், இதற்கு முன்பும் இதேபோல் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சரை சந்தித்து தென்னை பிரச்சினை குறித்து பேசியுள்ளதாகவும் கூறினார். மத்திய அரசு கோவைக்கும் கோவை தொழில் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், ஒரு எம்.எல்.ஏ.வாக இது என்னுடைய வேலை என்பதால் இந்த மாபெரும் கடனுதவி திட்டம் நமக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக வேலை செய்கிறேன் எனவும் கூறினார்.
கோவையில் அரசியல் தொடர்பான நிகழ்வுகள் எதுவும் நிதியமைச்சருக்கு இல்லை எனவும், தனிப்பட்ட நிகழ்வுகள் எதுவும் இல்லாத நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை அனைத்தும் தேசிய தலைமை முடிவு செய்யும் எனவும் கூறினார். நேற்றைய தினம் பாஜகவின் கோட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் மாநில தலைவர் இல்லாமல் நடைபெற்றது குறித்த குறித்து பேசிய வானதி, அது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும், மாநிலத் தலைவர் இல்லாமல் அமைப்பு செயலாளர் தலைமையில் கோட்டத் பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்தலாம் எனவும் தெரிவித்தார்.