சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு முன்னதாக கொரோனா உறுதி செய்யப்பட்டது.


அதிமுகவில் கலக்கம்


இதனைத் தொடர்ந்து தனக்கும் கொரோனாத் தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தவிர, முன்னதாக தன்னை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் சந்திக்காமல் எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள சூழலில் அதிமுக வட்டாரத்தில் இச்சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


முக்கிய நிர்வாகிகளுக்கு கொரோனா அபாயம்


முன்னதாக, ஜூன் 23ஆம் தேதி சென்னை, வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டத்தில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த நிலையில், பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் ஒற்றைத் தலைமை வலியுறுத்தி 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாகத் தெரிவித்தனர்.


இக்கூட்டத்தில் இருந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறினார். இதனிடையே நேற்று (ஜூன்.27) சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள் 65 பேர் கலந்து கொண்டனர்.


இபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனை


மேலும் இந்தக் கூட்டத்திற்கு முன்னதாக நேற்று காலை எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் வைத்து முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


இப்படி இரண்டு இடங்களிலும் நடந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, முன்னதாக அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இவர்களைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் தொற்றுப் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று (ஜூன்.28) அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதிமுகவில் இருக்கும் உள்கட்சிப் பூசலால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த கொரோனா தொற்றுப் பரவல் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண