அடையாளம் தெரியாத இளைஞர்..

 

செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வல்லம் பகுதியில் செங்கல்பட்டு- திருக்கழுகன்றம் பிரதான சாலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நடுரோட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர், சடலத்தை மீட்டு செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 


 

அர்ஜுனனின் சடலத்தை வாங்க மறுத்து.

 

இதில் இறந்தவர் சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் அரசங்கழனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பதும், இவர் பரங்கிமலை பாமக முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளர் என தெரியவந்தது. இவர் பகுதி நேரமாக  ஆன்லைனில் கார் வாடகைக்கு ஓட்டி வருவதாகவும் தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல்  காரை எடுத்துக்கொண்டு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு  சென்றுள்ளார். அதன் பிறகு அவரை காணவில்லை என உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் எதற்காக, இந்த கொலை சம்பவம் நடைபெற்றது என மூன்று தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உயிரிழந்த அர்ஜுனனின் சடலத்தை வாங்க மறுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


 

சிசிடிவி காட்சிகள்..

 

இந்நிலையில் அச்சரப்பாக்கம் அருகே, சந்தேகத்துக்கு இடமான கார் ஒன்று நின்று இருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. அதன் பிறகு இந்த கார் கடத்தப்பட்ட கார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகள், காரை இங்கேயே விட்டுவிட்டு சென்று உள்ளனர் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக 3 நபர்களை பெரம்பலூரில் கைது செய்தனர்.

 


 

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் கரியனூர், மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த, பிரசாந்த், குட்டி முத்து, திருமூர்த்தி என தெரியவந்தது. மூவரும் சென்னையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மூட்டை தூக்குவது, உணவகங்களில் வேலை செய்வது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

 

ஊரில் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால், திருவிழாவிற்கு ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் கையில் பணம் இல்லாமல் தவித்துள்ளனர். இதனையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு திருவிக நகரில் உள்ள நகைக்கடை, ஒன்றை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். ஆனால் அந்த திட்டத்தை திடீரென கைவிட்டு விட்டு, காரை புக் செய்து கடத்தலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். அதன் அடிப்படையில் முதலில் ஒரு காரை புக் செய்து வண்டலூர் வரை வந்துள்ளனர். ஆனால் அதை கடத்த முடியாமல் போய் உள்ளது. 


 

இதனை அடுத்து தான் சித்தாலப்பாக்கம் பகுதியை சேர்ந்த அர்ஜுனனின் காரை புக் செய்துள்ளனர். காரில் ஏறியவுடன் ஓட்டுனர் அர்ஜுனனை, கத்தி காட்டி மிரட்டி பல இடங்களில் குத்தி கிழித்துள்ளனர். இதனை அடுத்து அர்ஜுனனை கொலை செய்து செங்கல்பட்டு சாலையில் வீசிவிட்டு காரை கொண்டு சென்றுள்ளனர். காரில் டீசல் இல்லாமல் மேல்மருவத்தூர் அடுத்துள்ள அச்சரப்பாக்கம் அருகே நின்றுள்ளது. அங்கேயே காரை நிறுத்திவிட்டு அர்ஜுனனிடம் இருந்து, பறித்து வந்த பணத்தை வைத்து பேருந்தில் தப்பி சென்றுள்ளனர். இக்கொலை தொடர்பாக, மேலும் இருவர் சம்பந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.