காவிரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த ஆட்சியில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் துரைமுருகன், “ஏற்கனவே இதற்கான விளக்கத்தை நான் கொடுத்திருக்கிறேன். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் இறுதியானது. குழு அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதே தவிர அதற்கு ஒரு தலைவரே நெடுநாட்களாக நியமிக்கவில்லை. ஒரு காலத்தில் இந்த பிரச்சனையே வரவில்லை. ஏனென்றால் ஆணையத்திற்கு தலைவரே இல்லை பிரச்சினை வரவில்லை. மேகதாது அணை கட்டும் விவகாரம் பற்றி உச்சநீதிமன்றம் தடை தெரிவிக்கவில்லை எனவே இது குறித்து விவாதிக்க வேண்டும் என கர்நாடகா உறுப்பினர் தெரிவித்தார். உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள் தவிர எந்த ஒரு வாக்கெடுப்பும் நடத்தவில்லை. மேகதாது திட்டத்தை CWCக்கே திருப்பி அனுப்பி விடலாம் என ஆணைய தலைவரே தெரிவித்துவிட்டார். மேகதாது திட்டம் சாத்தியமா இல்லையா என முடிவெடுக்கவும் மேல் நடவடிக்கைக்காகவும் CWC க்கு அனுப்ப உள்ளதாகவும் மீண்டும் ஆணைய தலைவர் அனுப்பினார்.
CWC க்கு அனுப்பிவிட்டால் மட்டுமே இந்த திட்டம் நிறைவேறி விடாது. தமிழ்நாட்டின் இசைவை பெறாமல் அவர்கள் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள எவரும் மேகதாது அணை கட்ட இசைவைத் தர மாட்டார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் இதற்கான இசைவை யாரும் தர மாட்டார்கள். எதிர்க்கட்சித் தலைவர் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கிறதோ அதே வேகமும் அதே அக்கறையும் எங்களுக்கும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.