Lok Sabha Election 2024: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு தலைமைச் செயலாளர்,டிஜிபியுடன் நாளை மறுநாள் பிற்பகலில் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அதோடு, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடனும், நாளை மறுநாள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இந்த பயணத்தின் போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமின்றி, மற்ற 3 தேர்தல் ஆணையர்களும் சென்னை வர உள்ளனர்.


தேர்தல் அதிகாரிகள் இன்று ஆலோசனை:



  • முன்னதாக இன்று, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய் பதூ தலைமையில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மற்றும் தேர்தல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

  • தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

  • நாளை காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி வாயிலாக தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.