ஈபிஎஸ் அறிக்கை:


அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எனும் பெயரில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும்  இந்த உருப்படாத ஆட்சியாளர்கள் , ஏழையின் வயிற்றில் அடிப்பது மட்டுமல்ல, ஏழைகளுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் தெருவில் நிறுத்தி வருகிறார்கள்.


தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை, தமிழக மக்கள் அனைவரும்  மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற  உயரிய நோக்கில் ஜெயலலிதா ஆட்சியிலும்,  அவரை தொடர்ந்து எனது ஆட்சியிலும் பொங்கல் பரிசாக ரொக்கம்  மற்றும் செங்கரும்புடன் கூடிய பொங்கல்  தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த விடியா திமுக அரசும், 2023 ஆண்டு தைப் பொங்கலுக்கு  குடும்ப அட்டைதாரர்களுக்கு  செங்கரும்பு வழங்குவார்கள் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். ஆனால், பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கமும், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. தைப் பொங்கல் என்றாலே  மக்களின் நினைவிற்கு  வருவது செங்கரும்புதான். 






ஆனால், அரசின் அறிவிப்பில்  செங்கரும்பு இடம்பெறாதது, செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின்  தலையில் இடி விழுந்தது போல் உள்ளது. பொதுமக்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, விவசாயிகளும், பொதுமக்களும் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


ரேஷன் அட்டைக்கு ரூ.5,000? 


மேலும், விவசாயிகள்  தாங்கள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்  என்று தமிழகமெங்கும் பல இடங்களில் ஆர்பாட்டம் செய்து வருவதாக பல ஊடகங்களில் செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம்  என்று வாய் வீரம்  காட்டும் முதலமைச்சர்,  நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, எங்களிடம் கேட்டபடி,  இந்த அரசு தைப் பொங்கலுக்கு  ரூ.5,000 ரொக்கத்துடன்  பொங்கல் தொகுப்பில் முழு  செங்கரும்பையும், 2 கோடியே 19 லட்சம்  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், அதற்கான  அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும்  என்றும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என, எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.