Continues below advertisement

சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எஸ்ஐஆர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக அதிர்ச்சித் தகவலை கூறினார். அவரது பேட்டியின் முழு விவரத்தை பார்க்கலாம்.

உண்மையான வாக்காளர்கள் வாக்களிக்கவே எஸ்ஐஆர் பணி

பீகார் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தேர்தலுக்கு முன்பாக SIR ஒரு மோசடி என்று குற்றம் சுமத்தினார்கள் என்றும், ஆனால், எஸ்ஐஆர் பணி என்பது உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவே மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்தார். அதோடு, பல்வேறு விமர்சனங்களை மீறி தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது, உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

Continues below advertisement

“SIR-ஐ எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம்“

மேலும், தமிழகத்தில் எஸ்ஐஆர் அறிவிக்கப்பட்ட உடனே, திமுக கூட்டணி கட்சிகள் எதிர்த்தன. அதற்குக் காரணம் பல ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. நகரப் பகுதியில் வசிப்பவர்கள் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களும் பட்டியலில் இருந்தன. எஸ்ஐஆர் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, நேர்மையான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன்பின் தேர்தல் நடைபெற்றால், நியாயமான தேர்தலாக இருக்கும் என்பதைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதற்கு முன்பு 8 முறை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள் தொடர்ந்து பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். பி.எல்.ஓ வீடு வீடாகச் சென்று விசாரித்து படிவங்களைக் கொடுத்துப் பெறவேண்டும். ஆனால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணி பல்வேறு மாவட்டங்களில் சுணக்கமாக இருக்கிறது. சென்னை மாநகராட்சியை பொருத்தவரை, பி.எல்.ஓ ஒருவர் 4ம் வகுப்பு படித்துள்ளார். அவரால் எப்படி மக்களிடம் விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், அவரை மாற்றவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு முறையாக நடைபெறக் கூடாது என்பதற்காகவே எதிராக செயல்படுகிறார்கள். அரசு அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வருகிறது. இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம். எப்படி முறைகேடாக வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது திமுகவுக்கு கைவந்த கலை. அதனால்தான் எதிர்க்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

“ஒவ்வொரு தொகுதியிலும் 50,000 போலி வாக்காளர்கள்“

பீகார் தேர்தலில் சதி நடைபெற்றிருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதை எப்படி சதி என்று சொல்ல முடியும்.? வாக்காளர்கள் தானே ஓட்டு போட முடியும் என்று கேட்ட அவர், அவர்கள் தோற்றால் சதி என்பார்கள், ஜெயித்தால் நல்லது என்பார்கள் என விமர்சித்தார்.

தொடர்ந்து, பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை கூறினார். ஆர்.கே நகரில் புள்ளி விவரத்தோடு கொடுத்தும் நீக்கவில்லை என்று கூறிய அவர், நீதிமன்றம் உத்தரவிட்டதால் 31 ஆயிரம் பேர் நீக்கப்பட்டனர் என்றும், இன்னும் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், ஒரு தொகுதியில் இப்படியென்றால், ஏன் ஒரு மாநிலத்தில் 65 லட்சம் வாக்குகள் வராது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதில் யார் மீதும் எந்த வித தவறும் இல்லை. எல்லா கட்சிகளும் பி.எல்.ஏ நியமித்துள்ளனர். எஸ்.ஐ.ஆரை எதிர்த்துவிட்டு, மற்ற கட்சியினரை விட திமுக தான் தங்கள் கட்சியின் பி.எல்.ஏ-க்களை, பி.எல்.ஓவுடன் வீடுவீடாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். புகைப்படம் எடுத்து வைத்துள்ளோம் என்று எடப்படி பழனிசாமி தெரிவித்தார்.