செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் உப்பளம் பகுதிக்கு மேலே பறந்துகொண்டிருந்த பயிற்சி விமானம் ஒன்றில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்தைத் தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழும் நிலைக்குச் சென்றது.
விமானி தப்பியது எப்படி?
விமானம் கீழே விழுவதை அறிந்த அதிலிருந்த பயிற்சி விமானி, துரிதமாகச் செயல்பட்டு, விமானம் தரையைத் தொடும் முன்பே பாராசூட்டை இயக்கி தப்பித்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரசூட் மூலம் அவர் பத்திரமாக தரையிறங்கியதால், எந்தவிதக் காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானம் உப்பளம் பகுதியில் விழுந்து நொறுங்கியதையடுத்து, அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு திரண்டனர். விபத்து குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறுக்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.