பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துள்ள நிலையில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை தமிழக  முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தென் சென்னையில் மருத்துவ வசதியினை மேம்படுத்தும் வகையில் புதிய பல்நோக்கு  மருத்துவமனை, மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த புதிய திட்டங்களாக உள்ளன.


 



தென் சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை


சென்னை சேப்பாக்கத்தில் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை உள்ள நிலையில் தென் சென்னையில் உள்ள கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் 250 கோடியில் 500 படுக்கை வசதிகளுடன்புதிய பல்நோக்கு மருத்துமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


மதுரையில் கலைஞர் நூலகம்


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை போல மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சம் சதுரடி பரப்பளவில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


திருநங்கைகளுக்கு பேருந்து பயணம் சலுகை


பெண்களை போன்றே திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நகர்ப்புற பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


இலக்கிய மாமணி விருது அறிமுகம்


இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது ஆண்டுதோறும் 3 பேருக்கு வழங்கப்பட்டு அவர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் 5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்


கனவு இல்லம்


தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்க எழுத்தாளர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்


திருவாரூரில் நெல் உலர்ப்பான்கள்


திருவாரூர் மாவட்டத்தில் 5 கோடி மதிப்பிட்டில் 10 வட்டாரங்களில் சூரிய ஒளியில் நெல் உலர்விக்கும் 50 களங்களும், கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் 60 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு சுழற்சி தொகுப்பு உலர்விப்பான்களும் நீடாமங்கலம், மன்னார்குடி வட்டாரங்களில் 60 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை உலர வைக்க இரண்டு தொடர் ஓட்ட உலர்விப்பான்களும் என 6.20 கோடியில் 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


காவலர்களுக்கு 5000 ஊக்கத்தொகை


கொரோனா காலகட்டத்தில் களப்பணியாளர்களாக இருக்கும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டங்கள் அனைத்தும் ஊரடங்கு முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டபின் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது