ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். 


செந்தில்பாலாஜி கைது:


மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச்செயலகம் அறை, உள்ளிட்ட பல இடங்களில் நேற்றைய தினம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அவர் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலக்கத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறியதால் உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். 


எடப்பாடி பரபரப்பு பேட்டி:


இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜி கைது சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அவர் போக்குவரத்து அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பணம் பெற்றதாக எழுந்த புகாரில் ஏற்கனவே அவர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் உச்சநீதிமன்றம் 2 மாதங்களுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டுமெனவும், இல்லாவிட்டால் சிறப்பு கண்காணிப்பு குழு விசாரிக்கும் எனவும் தெரிவித்திருந்தது. 


அதனடிப்படையில் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது இப்போது போடப்பட்ட வழக்கு அல்ல. அதுமட்டுமல்ல டாஸ்மாக் கடைகள் 6 ஆயிரம் தமிழ்நாட்டில் உள்ளது. இதில் 4 ஆயிரம் கடைகளின் பார்களுக்கு  டெண்டர் விடவில்லை. அரசுக்கு வருகின்ற வருவாய் மேலிடத்துக்கு சென்று கொண்டிருப்பதாக ஊடகத்தில் செய்திகள் வந்தது. 2 முறை ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


அருகதை கிடையாது:


இந்த 2 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மோசடிகள் எல்லாம் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை மூலம் வெளியே தெரிகிறது. இன்னைக்கு முதலமைச்சர் கொடுத்த பேட்டியில், செந்தில் பாலாஜி உத்தமர் போலவும், வேண்டுமென்றே  திட்டமிட்டு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறியுள்ளார். 


ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.  செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம், ‘எந்த ஆவணம் கைப்பற்றப்பட்டாலும், அதற்கான பதிலை முழுமையாக தருவேன்’ என சொன்னார். அதை செய்ய வேண்டியது தானே? என எடப்பாடி கேள்வியெழுப்பினார்.  மேலும் இந்த கைது சம்பவம் மனித உரிமை மீறல் என சொல்வதற்கு முதலமைச்சருக்கு அருகதை கிடையாது.


அக்கறை கிடையாது:


எங்கே தாங்கள் சிக்கிக் கொள்வோம் என்பதால் தான் இன்றைக்கு செந்தில் பாலாஜியை முதலமைச்சரும், அமைச்சர்களும் ஓடோடி சென்று பார்க்கிறார்கள். அவர் மேல் எல்லாம் அக்கறை கிடையாது. அதேசமயம் செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.