திமுக அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணனின் ரூ. 6.5 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2001 , 2006 ஆகிய இரு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பிலும், 2010 இடைத்தேர்தல், 2011, 2016, 2021ஆகிய நான்கு முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினராக, தேர்ந்தெடுக்கப்பட்டார். கால்நடை வளம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும், 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவுடன் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநில அமைச்சர் என படிப்படியாக வளர்ச்சி அடைந்தவர். 8 ஆண்டுகள் தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்தார்.
2009 ல் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ராதாகிருஷ்ணன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில், சேர்ந்தார். 2016ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியிலில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரை வென்றார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றிப்பெற்று தமிழகத்தின் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரானார்.