கடந்த 2011ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் நடத்துநர், ஓட்டுனர், மெக்கனிக் உள்ளிட்ட வேலைகளை வாங்கித்தருவதாக 81 பேரிடம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தாக அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. 


கடந்த 2015 அக்டோபரில் தேவசகாயம் என்பவர் தனது மகனுக்கு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பழனி என்ற கண்டக்டரிடம் ரூ.2.60 லட்சம் கொடுத்ததாக புகார் அளித்தார். தன்னுடைய மகனுக்கு வேலை கிடைக்கவில்லை, பணம் திரும்பவும் கிடைக்கவில்லை என புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.


எமனாக மாறிய அமலாக்கத்துறை:


ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அவர் குற்றச்சாட்டு சுமத்தவில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு, மார்ச் மாதம், கோபி என்ற நபர் இதேபோன்ற புகாரை அளித்தார். போக்குவரத்தத்துறையில் வேலை வாங்குவதற்காக அமைச்சர் பாலாஜியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு நபர்களிடம் 2.40 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால், தனக்கு வேலை வாங்கி தரவில்லை என்றும் புகார் அளித்தார். 


இந்த புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, கோபி தனது புகாரை பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


முதலில் கோபியின் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தேவசகாயம் தாக்கல் செய்த முந்தைய வழக்குடன் அவரது புகாரையும் இணைத்தது. இருப்பினும், தேவசகாயம் வழக்கில் அமைச்சரை குற்றம்சாட்டவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்களால் அவர் மிரட்டப்படுகிறார் என்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கோபி மேல்முறையீடு செய்தார்.


அதிகாரிகளை தாண்டி அமைச்சரையும் விசாரிக்க வேண்டும் என கோபி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கோபியின் மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அதிகாரிகளை தாண்டி மேல்மட்ட அளவில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது. 


அமைச்சர் செந்தில் பாலாஜி சிக்கியது எப்படி?


இருப்பினும், 2017 ஆம் ஆண்டு, காவல்துறை தாக்கல் செய்த இறுதி அறிக்கையில், அமைச்சர் மற்றும் அவரது உறவினர்கள் தவிர்த்து, தேவசகாயத்தின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 12 நபர்கள் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்களாக குறிப்பிடப்பட்டனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நபர்கள் மீது குற்றம் சாட்டுவதையும் அறிக்கை நிராகரித்தது.


இதை தொடர்ந்து, மேலும் பல புகார்கள் எழ தொடங்கின. கடந்த 2017ஆம் ஆண்டு போக்குவரத்து துறை ஊழியர் கணேஷ் குமார் அளித்த புகாரில், "வேலை தேடுபவர்களிடமிருந்து 95 லட்சம் ரூபாய் வசூலிக்குமாறு செந்தில் பாலாஜி மற்றும் மூவர் தன்னிடம் அறிவுறுத்தியதாக" குற்றம் சாட்டினார். 


கடந்த 2018ஆம் ஆண்டு, இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது மீண்டும் கிரிமினல் குற்றங்கள் மீது கவனம் செலுத்தியதே தவிர, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவில்லை. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள போதிலும், விசாரணைகள் அனைத்திலும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்காததால் மேலும் ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதற்கிடையே, செந்தில் பாலாஜி 2018ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 2021 சட்டப்பேரவை தேர்தலில், தனது சொந்த ஊரான கரூரில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், புதிய திமுக அமைச்சரவையில் அமைச்சர் பதவியைப் பெற்றார். இதனை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகம், சகாயராஜன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாகச் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதை ஏற்று, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தர்மராஜ், ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு, அமலாக்கத்துறை உள்ளிட்டோர் தொடங்கி 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


வழக்கின் அதிரவைக்கும் பின்னணி:


இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இருந்த தடைகளும் நீக்கப்பட்டன.


செந்தில் பாலாஜி மீதான இந்த மோசடி வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகச் சொல்லப்பட்ட புகாரின் அடிப்படையில் 2021இல் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது. செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை உயர் நீதிமன்றம் ரத்துசெய்து அளித்த தீர்ப்பை, ரத்துசெய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் 2022, டிசம்பர் 1-ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 


இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் விசாரித்தது.


"செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாட்டின் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முதலிலிருந்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும். இதற்காக தேவைப்பட்டால் போலீஸார் சிறப்பு விசாரணைக்குழு அமைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது. 


செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் இரண்டு மாதங்களில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த உத்தரவின் அடிப்படையில்தான் நேற்று அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடத்தி அவரைக் கைதுசெய்துள்ளது.