தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட அமர்வில் இருந்து நீதிபதி ஒருவர் விலகியுள்ளார். செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரிப்பதற்காக நீதிபதி சுந்தர், நீதிபதி சக்திவேல் ஆகியோர் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது.


வழக்கை விசாரிப்பதில் இருந்து பின்வாங்கிய நீதிபதி:


ஆனால், தற்போது வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி சக்திவேல் விலகியிருப்பதாக அமர்வில் இடம்பெற்றிருந்த மூத்த ஆர். சுந்தர் தெரிவித்துள்ளார். எனவே, வழக்கு இன்று பட்டியலிபட்டாலும் குறிப்பிட்ட டிவிஷன் பெஞ்ச் வழக்கை விசாரிக்க முடியாமல் போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலாவின் ஒப்புதலுடன் , இந்த வழக்கு நீதிபதிகள் ஜே. நிஷா பானு மற்றும் டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வர உள்ளது.


புதன்கிழமை அதிகாலை தனது கணவரைக் கைது செய்வதற்கு முன்பு அமலாக்க இயக்குநரகம் (ED) உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று செந்தில் பாலாஜியின் மனைவி ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


முன்னதாக, அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டதன் அடிப்படையில், அவரை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே, உடனே ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் என திமுக மூத்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். 


நடந்தது என்ன?


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை (இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக்குழாய்களில் இருக்கும் அடைப்புகள் குறித்து கண்டறிய செய்யப்படும் பரிசோதனை) செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு ரத்தக்குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 


காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையில், மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படவுள்ளதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



செந்தில் பாலாஜியிடம் தொடர்ந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது எனவும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். “செந்தில் பாலாஜி குறிவைக்கப்பட்டுள்ளார், சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ரகுபதி கூறினார்.


விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின்அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.