மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப மனிதன் ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்தான். அந்த வகையில் தற்போது ஏறிவரும் பெட்ரோல் விலை சாப்ட்வேர் இன்ஜினியர் முதல் சாதாரண விவசாயிகள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிப்படையச் செய்துள்ளது. பெட்ரோல் விலை காரணமாக விவசாய பணிகளுக்கு ஏதுவாக தனக்கென ஒரு பேட்டரி வாகனத்தை மூலம் வடிவமைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலமுருகன். இவர், அந்த கிராமத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் மானாவாரிப் பயிர்களாக நெல், பருத்தி, மிளகாய் ஆகியவற்றை பயிரிட்டு சாகுபடி செய்துள்ளார். விவசாயி பாலமுருகன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய TVS XL பைக்கை தனது விவசாய பணிகளுக்கும் அன்றாட பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நாள்தோறும் தொடர்ந்து பெட்ரோல் விலை நாளுக்கு நாள் எகிரிய நிலையில், தற்போது ரூபாய் 100யை கடந்து கடும் உயர்வை எட்டி உள்ளது விவசாயி பாலமுருகனுக்கு மாதம் பெட்ரோல் செலவீனம் மட்டும் மாதம் ரூபாய் 4 ஆயிரத்தை கடந்தது. இதனால் வருத்தம் அடைந்த விவசாயி பெட்ரோல் செலவினங்கள் விவசாய பணியில் மகசூல் கிடைக்கும் தொகை ஆகியவற்றை கணக்கீடு செய்து ஒப்பிட்டு பார்க்கையில், விவசாய பணியில் பெரும் நஷ்டம் ஏற்படும் என அறிந்து இதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது செய்ய வேண்டுமென சிந்தித்தார் விவசாயி பாலமுருகன்.
விவசாய பணிக்கு பயன்படுத்தப்படும் தனது பைக்கிற்கு பெட்ரோலை பயன்படுத்தாமல் மின்சாரத்தில் சார்ஜ் செய்து பேட்டரியில் இயங்கும் வகையில் தனது பைக்கை வடிவமைக்க துவங்கினார். இதற்காக மதுரை சென்ற விவசாயி உதிரிபாகங்கள் பேட்டரி ஆகியவற்றை வாங்கி வந்து பேட்டரியில் இயங்கும் வகையில் தானாகவே வடிவமைத்து சோதனை முறையில் இயக்கி அதில் வெற்றியும் கண்டார்.
பத்தாம் வகுப்பு வரை கூட முழுமையாக கல்வியறிவு பெற்றிராத விவசாயி பாலமுருகன் தனது அறிவாற்றல் மூலம் தொலை நோக்குப் பார்வையால் விவசாய பணிகளில் முன்னேற்றம் கண்டு சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு அவரது எண்ணத்தை சாத்தியமாக்கி சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம் தற்போது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பைக் 70 கிலோமீட்டர் தொலைவிற்கு 250 கிலோ எடை கொள்ளளவை சுமந்து பயணித்து வருவதாக பெருமிதம் கொள்கிறார் விவசாயி பாலமுருகன்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அவற்றைப் பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக மின்சாரத்தில் சார்ஜ் செய்து பேட்டரியில் இயங்கும் இது போன்ற வாகனங்களை பயன்படுத்தினால், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மூலம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் அவற்றைத் தவிர்த்து மாதம் குறைந்தது 3000 சேமிக்கலாம் இதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் தனி நபர் வாழ்க்கைத் திறன் மேம்படும் என மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.