தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனது எர்ரவெல்லி பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் தெலங்கானாவின் ஆட்சி கட்டிலில் காங்கிரஸ் முதல் முறையாக அமர்ந்தது. இரண்டு முறை தெலங்கானாவின் முதலமைச்சராக இருந்த சந்திரசேகர் ராவ் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி தெலங்கானாவில் 2வது முதலமைச்சராக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற பிறகு பேசிய ரேவந்த் ரெட்டி, “போராட்டங்கள், தியாங்கங்களை அடித்தளமாக கொண்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. சமூக நீதி, சமமான வளர்ச்சிக்காக மன உறுதியுடன் தெலங்கானாவை உருவாக்கியவர் சோனியாகாந்தி. மக்களின் அரசாங்கம் உருவாகியுள்ளது. கேசிஆரின் பத்தாண்டுகால எதேச்சதிகாரத்தை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். நாங்கள் ஆட்சியாளர்கள் அல்ல. வேலைக்காரர்கள். நீங்கள் வழங்கிய சந்தர்ப்பத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.
பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ரேவந்த் ரெட்டி. இந்நிலையில் சந்திரசேகரராவ் குடும்பத்துக்கு எதிராகவும் பல சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சந்திரசேகர் ராவ் தனது பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாக ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கிழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே.சி.ஆர் மகள் கவிதா இது தொடர்பான எக்ஸ் பதிவில், “ தந்தை லேசான காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் உங்கள் அன்பு மூலம் அவர் விரைவில் குணமடைவார்” என தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும், இதிலிருந்து விரைவாக மீண்டு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காளேஸ்வரம் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து கே.சி.ஆர் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் என ஊழல் தடுப்பு பணியக(ACB) டிஜியிடம் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரபோலு பாஸ்கர் புகார் அளித்தார்.
பிரசாரத்தின் போது, காளேஸ்வரம் திட்டத்தில் ஊழல் நடந்ததாகவும் கேசிஆர் குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். கண்காணிப்புக் குழு மூலம் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.