Air India Plane Crash: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விளைவாக போயிங் 787-8 ரக,  விமானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகின்றன.

Continues below advertisement


போயிங் 787-8 விமானங்களுக்கு தடை:


ஏர் இந்தியா நிறுவனத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த போயிங் ட்ரீம்லைனர் 787-8 ரக் விமானம், அகமதாபாத்தில் நேற்று டேக்-ஆஃப் ஆன சில மணி நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 242 பேர் உயிரிழக்க ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்நிலையில் போயிங் ட்ரீம்லைனர் ரக விமான பயன்பாட்டிற்கு இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய பரிசோதனை மேற்கொள்ளப்பட, இந்த நடவடிக்கையை எடுப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவன ஊழியர்கள், விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனையை மேற்கொள்ள இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


ஏர் இந்தியாவிற்கு சிக்கல்?


போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் மீதான இறுதி முடிவானது, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணையின் முடிவில் எடுக்கப்படும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதுபோக, விமான பராமரிப்பு தொடர்பான அதன் நிலையான இயக்க நடைமுறை குறித்து, ஏர் இந்தியா நிறுவனமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படலாம் என்று மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


242 உயிர்களை பறித்த கோர விபத்து எப்படி?


சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டை இழந்து, மேகானி நகரில் உள்ள பிஜே மருத்துவ கல்லூரி மருத்துவர்களின் குடியிருப்பு கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இதனால் எழுந்த கரும்புகை பல நூறு அடி உயரத்திற்கு எழுந்தது.  இதுவரை கிடைத்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில், இரண்டு இன்ஜின்களிலும் உந்துவிசை இல்லாதது மற்றும் பறவை மோதியது ஆகியவை விபத்திற்கான சாத்தியமான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று விமான நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.


போயிங் ட்ரீம்லைனர் விமானம்:


போயிங் 787 ட்ரீம்லைனர் என்பது விமான நிறுவனங்களால் கண்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் நீண்ட தூர வாகனமாகும். அதன் முதல் பயணம் அக்டோபர் 26, 2011 அன்று டோக்கியோ நரிட்டாவிலிருந்து ஹாங்காங்கிற்கு ஆல் நிப்பான் ஏர்வேஸ் விமானம் மூலம் நடைபெற்றது. அதன்பிறகு 14 ஆண்டுகளுக்குள் 1 பில்லியனுக்கும் அதிகமான பயணிகள் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் பயணித்துள்ளனர்.  2011 ஆம் ஆண்டு சேவையில் நுழைந்ததிலிருந்து ட்ரீம்லைனர் எந்த உயிரிழப்பு விபத்துகளையும் எதிர்கொண்டதில்லை என்ற பெருமை அகமதாபாத் விபத்து மூலம் முடிவுக்கு வந்துள்ளது. போயிங் 787 சீரிஸில் தற்போது மூன்று மாடல்கள் உள்ளன, போயிங் 787-8 தான் மிகச் சிறியது மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாடல் ஆகும். இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து போயிங் 2,500க்கும் மேற்பட்ட 787 விமானங்களை விற்றுள்ளது. மேலும் 47 விமானங்களை ஏர் இந்தியா வாங்கியுள்ளது.