சேலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு ஆக்சிஜன் மற்றும் மருத்துவ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக சேலம் இரும்பாலையில் 500 பேருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா மருத்துவ சிகிச்சை பெற படுக்கை வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்கு ஜேஎஸ் டபிள்யூ மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித்தனர். இந்த படுக்கை வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 


இந்நிலையில் சேலம் இரும்பாலையில் கொரோனா படுக்கை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் சேவா பாரதி அமைப்பு மக்களிடம் நிதி வசூலித்ததாக திராவிடர் விடுதலை கழகம் புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளது. அதில், "சேலத்தில் கொரோனா பெருந்தொற்று வேகமெடுத்து வரும் நிலையில் சேலம் இரும்பாலை பகுதியில் 500 ஆக்சிசன் படுக்கை வசதி கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து நன்கொடை மூலம் உருவாக்கிவருகிறது.






இதற்கு எந்த ஒரு தனியார் அமைப்போ பொதுமக்களிடம் வசூல் செய்ய அரசு அனுமதிக்காத போது ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான சேவாபாரதி என்கிற பெயரில் வங்கிக் கணக்கில் இந்த மருத்துவமனைக்கு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்வதற்காக வங்கிக் கணக்கு துவங்கி யூட்யூப் சேனல் வலைதளம் மூலமாக வசூல் செய்கின்றனர்" எனப் புகார் தெரிவித்துள்ளது. இந்த புகார் தொடர்பாக உடனடியாக தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் முகஸ்டாலின் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திவிக கோரிக்கை விடுத்துள்ளது. 






ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக சசிக்குமார் என்ற மருத்துவர் ஒரு யூடியூப் பக்கத்தில் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து நிதி வசூல் செய்து வருவதாக தனியார் அமைப்புகள் புகார் அளித்துள்ளனர். இந்தச் சூழலில் தற்போது திவிக அமைப்பும் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.