அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையை கண்டித்து அதிமுக தொண்டர்கள் இரு முன்னாள் அமைச்சர்களின் இல்லத்தின் முன்பாக திரண்டனர். அத்துடன் கோவையில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு முன்பாக 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருந்தனர். 


இந்நிலையில் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் திரும்பி செல்ல வலியுறுத்தினர். எனினும் அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதன்காரணமாக காவல்துறையினர் அமல் கந்தசாமி, அம்மன் அர்ச்சுனன், செ.தமோதரன்,  கந்தசாமி, பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ் ஆகிய‌ 6 எம்.எல்.ஏக்களை கைது செய்துள்ளனர். 


 








மேலும் படிக்க:ராகுல் நடைபயண ஏற்பாட்டில் உங்கள் பங்களிப்பு என்ன...? எம்.பி ஜோதிமணிக்கு சவால் விடுத்த காங்கிரஸ் துணைத் தலைவர்...!




வேலுமணி மீது உள்ள புகார்:


அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பணியாற்றி வந்தார். அப்போது தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி பல்புகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக சேலம், தர்மபுரி,திருச்சி, நாகபட்டினம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகள் வாங்கிய டெண்டரில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது.


 






அதன்படி இந்த 5 மாவட்டங்களில் சந்தை விலையைவிட மிகவும் அதிகமான விலைக்கு எல்.இ.டி பல்புகள் வாங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சுமார் 74 கோடியே 58 ஆயிரத்து 700 ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட 26 இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறது. 


எஸ்.பி.வேலுமணியுடன் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள புகாரில் மேலும் 9 பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி கே.சி.பி எஞ்சினியர்ஸ் குழுமத்தின் கே.சந்திரபிரகாஷ் மற்றும் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏசி.இ. டெக் மிசினரி என்ற நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன், சித்தார்த்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவாகியுள்ளது. கோவையை சேர்ந்த கே.யூ.ராஜன், சென்னையைச் சேர்ந்த சி.டி.ராதாகிருஷண்னன், ஆர்.பரசுராமன்,பி.விஜய்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: வசமாக சிக்கிய முன்னாள் அமைச்சர்கள்! அதிரடி காட்டும் அதிகாரிகள்! - எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?