ராகுல் காந்தி தமிழ்நாட்டில் மேற்கொண்ட பாதயாத்திரைக்கான பணம் வசூல் தொடர்பாக மாநிலத் துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி - கரூர் எம்.பி.ஜோதிமணி இருவருக்குமிடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 'பாரத் ஜோடா யாத்ரா' எனப்படும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். அதன்படி கன்னியாகுமரியில் இருந்து தனது பாதயாத்திரையைத் தொடங்கிய ராகுல், தமிழ்நாட்டில் தன் பயணத்தை முடித்துக் கொண்டு முன்னதாக கேரளா சென்றடைந்தார்.
இச்சூழலில் தமிழ்நாட்டில் முன்னதாக முடிவுற்ற பாதயாத்திரைக்கான பணம் வசூல் தொடர்பாக மாநிலத் துணைத் தலைவர் பொன். கிருஷ்ணமூர்த்தி - கரூர் எம்.பி.ஜோதிமணி இருவருக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஜோதிமணிக்கு சவால் விடுத்து பொன். கிருஷ்ணமூர்த்தி முன்னதாக தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அன்பு சகோதரியார் நாடாளுமன்ற உறுப்பினர் அம்மையார் ஜோதி மணி அவர்களுக்கு வணக்கம். இதை ஃபேஸ்புக் வாயிலாக எழுத வேண்டிய அவல நிலை வந்து விட்டதை எண்ணி வருத்தம் அடைகிறேன். தங்களிடம் கன்னியாகுமரியிலேய நேரடியாக கேட்டு விட நினைத்தேன்.
தங்களை தனியாக சந்திக்க கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை, போனில் தங்களை அழைத்தேன் தாங்கள் எடுக்கவே இல்லை. ஆனால் வேறு வழியின்றி இதன் மூலம் தங்கள் பதிலைப் பெற விரும்புகிறேன்.
தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு நான் நிறைய வசூல் செய்து விட்டதாக முக்கியத் தலைவர் ஒருவரிடம் கூறி உள்ளீர்கள். இதைக் கேட்ட உடன் என் மனம் துடிதுடித்து விட்டது. நான் தங்களுக்கு சவால் விட்டு கூறுகிறேன், நான் ஒரே ஒருவர் இடத்தில் வசூல் செய்து இருக்கிறேன் என்று தாங்கள் நிருபித்து விட்டால், என்னுடைய மாநில துணைத் தலைவர் பதவியை அந்த நொடியே ராஜினாமா செய்து விடுகிறேன். அப்படி தாங்கள் நிருபிக்கா விட்டால், நீங்கள் உங்கள் எம்பி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய தயாரா?
மேலும் தாங்கள் நன்றி சொல்லி ஃபேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளதை படித்தேன். சிரிப்பு தான் வந்தது. உழைப்பைத் திருடாதீர்கள். இரவு பகல் பாராமல் இந்த வயதிலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாவட்டம் மாவட்டமாக கூட்டம் போட்டு ராகுல் வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி வந்த கூட்டம் தான் அது. அவருக்கு துணையாக இவிகேஎஸ் இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் போன்றவர்கள் எடுத்த பெரும் முயற்சியை மறுக்க முடியுமா உங்களால்?
இந்தப் பாத யாத்திரையில் தங்கள் பங்களிப்பு என்ன என்பதையும் அந்த ஃபேஸ்புக் பதிவில் தாங்கள் குறிப்பிட்டு இருக்கவேண்டும். எதையுமே செய்யாத தாங்கள், எல்லாவற்றையும் நீங்களே செய்தது போல எழுத எப்படி உங்கள் மனசாட்சி இடம் தருகிறது?
எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் செலவில் பங்கு எடுத்து கொண்டார்கள். தங்கள் பங்களிப்பு இதில் என்ன, அதில் பங்களிப்பு இல்லாத தாங்கள் ஃபேஸ்புக்கில் எழுதுவது எந்த வகையில் நியாயம். உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு சகோதரர் பொன் கிருஷ்ணமூர்த்தி, நன்றி.” எனப் பதிவிட்டுள்ளார்.
பொன் கிருஷ்ண்மூர்த்தியின் இந்தப் பதிவு காங்கிரஸ் வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.