வருமானத்திற்கு அதிகமாக 654% அளவுக்கு சொத்து குவித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய நிலையில், அவரை நேரடியாக வரவழைத்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் சம்மன் வழங்கவும் லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளது.



அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி


கடந்த அதிமுக ஆட்சியில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி, 5 ஆண்டு காலத்தில் முறைகேடாக 28.78 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை, கடந்த 16ஆம் தேதி அவருக்கு சொந்தமான ஜோலார்பேட்டை அருகேயுள்ள இடையம்பட்டி வீடு, ஹோட்டல், வேளாண் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அதில், 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி பொருட்கள், கணக்கில் வராத 34 லட்சம் ரொக்கம், 1.80 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 9 சொகுசு கார்களை பறிமுதல் செய்த போலீசார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 551 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.


கே.சி.வீரமணிக்கு விரைவில் சம்மன்


இந்நிலையில், இந்த வழக்கு குறித்தும் அவருக்கு சொந்தமான இடங்கலில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை பற்றியும் கே.சி.வீரமணியை சென்னை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக அவருக்கு விரைவில் சம்மன் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கைதாகிறாரா கே.சி.வீரமணி


கே.சி.வீரமணி நேரடியாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தும்போதே அவர் கைது செய்யப்படவும் அதிக வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு மட்டுமில்லாமல், சட்டவிரோதமாக வெளிநாட்டு கரன்சியை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது, மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் கே.சி.வீரமணி மணி மீது பாயும் என கூறப்படுகிறது.


உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்


9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கே.சி.வீரமணியி கைது செய்யப்பட்டால், அது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட அவரது ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களில் எதிரொலிக்கும்.


யாருக்கு சாதகம் ?


ஒருவேளை கே.சி.வீரமணி கைது செய்யப்பட்டால், ஊழல் பேர்வழி என்று சொல்லி திமுகவினரும், அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லி அதிமுகவினரும் மக்களிடம் வாக்குகளை கவர முனைவார்கள்.  கே.சி.வீரமணி கைது செய்யப்பட்டால் அது உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினருக்கே சாதகமாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  உள்ளாட்சி தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் திட்டமிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி மக்களின் அனுதாபத்தை பெற்று இந்த மூன்று மாவட்டங்களில் அதிமுகவினர் அதிக இடங்களை வெல்லவும் வாய்ப்பு உள்ளது.


லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம் என்ன ?


கே.சி.வீரமணியை கைது செய்யாமல், விசாரணைக்கு என்று பலமுறை அழைத்து குடைச்சல் கொடுக்கவும், உள்ளாட்சி தேர்தலில் அவரது கவனம் செலுத்தாமல் இருக்கும் வகையில் அலைக்கழிக்க வைக்கவும் லஞ்ச ஒழிப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மணல் கடத்தல் தொடர்பாகவும் அவர் மீது தனியாக ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணை ஆஜராகுமாறும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.