பிரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட நடிகை சாய் பல்லவி, நாக சைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படம் கடந்த 24 ஆம் தேதி வெளியானது. சேகர் கம்முலா இயக்கிய இப்படத்தில் உயர்சாதி பெண்ணாக நடித்திருக்கும் சாய் பல்லவி, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நாக சைதன்யாவை காதலிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்கிறார்.


சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கும் சாதிவெறி கவுரவக் கொலை பிரச்சனைகள் குறித்து துணிச்சலாக பேசும் இப்படம் தெலுங்கில் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக இதில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டுள்ளது. அண்மையில் தமிழில் வெளியான பாவக் கதைகள் என்ற ஆந்தாலஜி படத்தில் வெற்றிமாறன் இயக்கிய பகுதியில் இதே போன்றதொரு கதையில் சாய் பல்லவி நடித்திருந்தார்.


இந்த நிலையில், The News Minute இணையதளத்துக்கு நடிகை சாய் பல்லவி அளித்த பேட்டியில் லவ் ஸ்டோரி படம், தனது திரை வாழ்க்கை, நீட் தற்கொலைகள் குறித்து பேசி இருக்கிறார்.


கேள்வி: சேகர் கம்முலா இந்த கதையை சொன்னவுடன் அது குறித்து நீங்கள் கூறிய கருத்து என்ன?


நான் முதலில் கதையை படித்தேன். அது நம் சமூகத்.தில் உள்ள 2 முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுகிறது. இதை கமர்ஷியல் படமாக, பிரசார நெடி இல்லாமல் இயக்குவது மிகவும் கடினம். இது 2 பேரின் வாழ்க்கை குறித்த படம். சிறுவயதில் அவர்கள் எதிர்கொண்ட விசயங்கள் அவர்களின் குணாதிசயங்களை தீர்மானிக்கின்றன. இப்படத்தில் இருவருக்கும் சமமான அங்கீகாரத்தை இயக்குநர் கொடுத்துள்ளார்.


பாவக் கதைகள் குறித்து பேசிய அவர், ஒரு நடிகையாக சில கதைகள் எனக்கு சவாலாக இருக்கும். சமுதாயத்தின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகமான சினிமாவில் நாம் ஒரு விசயத்தை பேசப்போகிறோம் என்ற பொறுப்பும் எனக்கு இருக்கும். அந்த படத்தின் மொத்த பார்வையும் இயக்குநர் வெற்றிமாறனுடையது. நான் அதில் வெறும் கருவி மட்டுமே. அந்த கதையை சேகர் கம்முலா லவ் ஸ்டோரி மூலம் முழு நீளப் படமாக எடுத்துள்ளார்.


இந்த படம் சமூகத்தில் உள்ள அரக்கர்களுக்கு எதிராக எங்களை பேச வைத்திருக்கிறது. இந்த கட்டமைப்பிலிருந்து தனி நபர்கள் எப்படி வெளிவருவது என்பது குறித்து பேசி இருக்கிறது. நம்மில் பலரும் இந்த பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்போம். சிலரது குணமே அதுவாக இருக்கலாம். ஒவ்வொரு இளம் பெண்ணும் இந்த கதையில் வருவதை போல் பிரச்சனைகளை சந்திக்கிறார். எனவே இதில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த படத்தை பார்ப்பவருக்கு, இது குறித்து வெளியில் உரையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். பெற்றோர்களுக்கும் இதுகுறித்த புரியதலை இந்த படம் ஏற்படுத்தும் என விரும்புகிறேன்.



கேள்வி: இந்த படத்துக்காக நீங்கள் எப்படி தயாரானீர்கள்?


இந்த படத்தில் ஃபிடா படத்தில் நடித்ததை போல் நடிக்கக்கூடாது என்று இயக்குநர் கூறினார். நான் இதற்காக பெரிய சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை. நாம் எல்லோரும் வாழ்க்கையில் எதிர்கொண்ட விசயத்தை படமாக எடுத்ததால் என்னால் எளிதாக கதையுடன் ஒன்றி நடிக்க முடிந்தது.


கேள்வி: பாவக்கதைகள், விரட்டா பார்வம், லவ் ஸ்டோரி என அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறீர்களே? அது பிடித்திருக்கிறதா?


அழுத்தமான கதைகளை கொண்ட படங்களை நான் விரும்பி பார்ப்பேன். அதனாலோ என்னவோ, நான் அதுபோன்ற படங்களில் விரும்பி நடிப்பதாக நினைக்கிறேன். எளிமையான கதாப்பாத்திரங்களில் நடித்துவிட்டு செல்வதை மட்டும் நான் விரும்பவில்லை. எனது அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான பாத்திரங்களில் நடிக்கிறேன். அதே சமயம் நான் எப்போதும் சிரித்துக்கொண்டு, உற்சாகமாக இருக்கும் பல்லவியாக இருப்பதே எனது ஆசை.


கேள்வி: கதாபாத்திரங்களில் அதிக கவனம் செலுத்துபவராக நீங்கள் இருக்கிறீர்கள். இதனால் பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கிறதா?


நான் எனது கதாப்பாத்திரம் குறித்த கருத்துக்களை நியாயமாக வெளிப்படுத்திவிடுவேன். சில இயக்குநர்கள் அதை கேட்டு எனது பாத்திர அமைப்பை மாற்றி எடுத்து வருவார்கள். இது கடினமான ஒன்று தான். ஆனால், எனது ரசிகர்களுக்கு நியாயமான இருக்க இதை நான் செய்தாக வேண்டும்.


கேள்வி: இன்ஸ்டாகிராமில் உங்கள் பதிவுகள் தனித்துவமாக இருக்கிறதே… மற்ற நடிகைகள் போட்டோசாப் செய்து படங்களை வெளியிடும்போது நீங்கள் மட்டும் எப்படி வித்தியாசமான படங்களை பகிர்கின்றீங்கள்?


முதலில் நான் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்துவது இல்லை. ஆனால், தற்போது எல்லோரும் அதை பயன்படுத்துகின்றனர். பலரது மனதில் அதுகுறித்து எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. எல்லா படங்களையும் சமூக வலைதளங்களில் நான் பகிர்வதில்லை. அதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை. நான் தனிமையை விரும்புபவள். எனக்கு ஏதாவது புகைப்படங்கள் பிடித்திருந்தால் அதை நான் பாதுகாத்து வைக்க விரும்புவேனே தவிர சமூக வலைதளத்தில் பகிர நினைக்க மாட்டேன். சில நேரங்களில் எனது தாத்தா, பாட்டி, எனது இடம், எனது பூனையின் படங்களை பகிர்ந்துள்ளேன்.


கேள்வி: 3 மொழிகளில் நடிக்கிறீர்கள். அதீத ஊடக வெளிச்சத்தால், புகழால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் பாதிப்புகளை சந்தித்து இருக்கிறீர்களா?


சில நேரங்களில் பொது இடங்களில் கடினமாக உணர்ந்திருக்கிறேன். எனது உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்த இயலாது. சில ஆண்டுகளுக்கு முன் புத்தாண்டு அன்று மாலை எனது விமானத்தை தவறவிட்டுவிட்டேன். நான் மட்டும் விமான நிலையத்தில் தனியாக இருந்தேன். பயத்தில் கண்கலங்கிவிட்டது. எனது தாய்க்கு வீடியோ கால் செய்தேன். அப்போது ஒருவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். என்னிடம் வந்து செல்பி எடுக்க விரும்பினார். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆனால், அவர் கேட்கவில்லை. ஒரே ஒரு படம் எடுக்க அனுமதித்தேன். யாரிடம் சொல்லாதீர்கள் என்று கூறினேன். என் கண்களில் கண்ணீர் இருந்ததை பார்த்த அவர் புரிந்துகொள்வார் என நினைத்தேன். ஆனால், அவர் செல்பி எடுக்க மேலும் 10-15 பேரை அழைத்து வந்தார். இது பிரேமம் அல்லது கலி படத்துக்கு பிறகு நடந்த ஒரு சம்பவம் என்று நினைக்கிறேன். 


சில நேரங்களில் மக்கள் அன்புடன் நம்மிடம் வந்து பேசுவார்கள். அவர்கள் நம்முடன் படம் எடுக்க விரும்புவார்கள். ஆனால், அந்த நேரத்தில் நம்மால் போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியாது. ஆனால், அதை அவர்களிடம் சொல்வது கடிமாக எனக்கு இருக்கும்.


கேள்வி: பாலிவுட் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகிறதே.. உண்மையா?


நானும் கேள்விப்பட்டேன். அது உண்மையல்ல. பல மொழிகளில் கதைகளை கேட்டு வருகிறேன். ஆனால், ஒப்பந்தம் செய்யவில்லை,


கேள்வி: நீங்கள் ஒரு மருத்துவர். கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


மருத்துவம் என்பது கடல் போன்ற படிப்பு. தேர்வில் எதிலிருந்து கேள்வி வரும் என்றே சொல்ல முடியாது. அதனால் மனதளவில் நிச்சயம் பாதிக்கப்படுவோம். பெற்றோர்களும் நண்பர்களும் குழந்தைகளுடன் பேச வேண்டும். எனது குடும்பத்திலும் மதிப்பெண் காரணமாக ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். அவர் மோசமான மதிப்பெண் எடுக்கவில்லை. ஆனால், அவருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு இவ்வாறு செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வது உங்கள் குடும்பத்தை ஏமாற்றும் செயல்.


தற்கொலை செய்துகொள்ளாதீர்கள் என்று என்னால் எளிதாக பேசிவிட முடியும். ஆனால், அந்த இடத்தில் இருப்பவருக்கு தான் அதன் வலி தெரியும். என்னிடம் பணம், படிப்பு எல்லாம் இருக்கிறது. ஆனால், அந்த தேர்வை அவர்கள் எந்த நிலையிலிருந்து எழுதினார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்கள் கிராமத்திலிருந்து வந்தவராக இருக்கலாம். தாயை இழந்தவராகக்கூட இருக்கலாம். நன்றாக தேர்வு எழுதியுள்ளேன் என்ற நம்பிக்கையில் கூட அவர் இருந்திருக்கலாம். அதற்கு மாற்றமாக முடிவு வெளிவந்ததால் நம்பிக்கை இழக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம்.


18 வயது கூட ஆகாத மாணவர்கள் இவ்வளவு இளம் வயதில் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் மன வேதனையை தருகிறது. பள்ளியில் நான் படித்தது எதுவும் என் நினைவில் இல்லை. கல்லூரியில் நான் படித்த பாடங்கள் நினைவில் உள்ளன. அழுத்தங்களால் கற்கும் பாடங்கள் பயனளிக்காது. உற்சாகமாக படிக்க வேண்டும். நான் எப்போதும் மாணவர்கள் பக்கம். நான் அவர்களின் வலியையும் பிரச்சனைகளையும் உணர்கிறேன்.