தருமபுரி அருகே அழிந்து வரும் பெருங்கற் கால ஈமச் சின்ன பகுதிகள்- பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக பராமரிக்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக தருமபுரி மாவட்டம் விளங்குகிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மாவட்ட பகுதிகளில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், தொல்லியல் பொருட்கள் கிடைத்து வருகின்றன. கடந்த 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத்தில் இந்தப் பகுதியை அதிகமாக மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் பெருங்கற்கால மனிதர்கள் நாகரீக வளர்ச்சியுடன் வாழ்ந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பங்குநத்தம் கிராமத்தில் உள்ள ஏகிலி காட்டுக் கொட்டாவில் உள்ள இரண்டு மலைக் குன்றுகள் பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் மற்றும் கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்கள், தங்களுடைய வாழ்விடங்களை விட, இறந்த பின்பு அடக்கம் செய்யும் இடங்களை கற்களை அடுக்க பாதுகாத்து வந்துள்ளனர். ஒருவர் இறந்தால், அவரை அடக்கம் செய்யும் இடத்தில், சுற்றிலும் கற்களை அடுக்கி வைத்து பாதுகாத்து வந்தனர். இந்த இடங்களுக்கு பெயர்தான் வட்டக்கல் அல்லது கல்வட்டம் என்றழைக்கப்படும்.
இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் ஒரு பகுதி, அவற்றின் முக்கியத்துவம் தெரியாததால் சேதமடைந்து அழிந்து வரும் நிலை உருவாகி வருகிறது. மேலும் மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மூலம் மின்சார சேமிப்பு கிடங்கு கட்டுமான பணிகளின் போது, பல வட்டக்கல் அமைந்த பகுதிகள் சேதமடைந்தது. மேலும் அங்குள்ள மக்கள் மலையில் உள்ள கற்களை வீடுகள் கட்ட உடைத்ததில் வட்டக்கல் பகுதியையும் உடைத்து எடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து பங்குநத்தம் பகுதியில் உள்ள வரலாற்று சின்னங்களை தொல்லியல் ஆர்வலர்கள் ஆய்வு செய்தனர். இந்த பெருங்கற்கால ஈமச் சின்ன பகுதியை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்களும் பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு பங்குநத்தம் கிராமத்தில் உள்ள பெருங்கற்கால ஈமச் சின்ன பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும் தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன, அதையும் அரசு ஆய்வு செய்யும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.