உலகப் புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


அக்டோபர் மாதம் வந்து விட்டாலே நம் அனைவருக்கும் நவராத்திரி திருவிழா நினைவுகள் வந்துவிடும். 9 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா வடமாநிலங்களில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது. வீட்டிலும், வழிபாட்டு தலங்களிலும் 9 நாட்கள் கொலு பொம்மைகள் வைத்து, பூஜை செய்து வழிபடுவது வழக்கம். விதவிதமாக வைக்கப்படும் கொலு பொம்மைகளை காண வயது வித்தியாசம் இல்லாமல் நம் அனைவருமே ஆர்வம் காட்டுவோம். அப்படியான நவராத்திரி விழாவின் இறுதி நாள் தசரா திருவிழா கொண்டாடப்படுகிறது. 


இந்தியாவில் கர்நாடகா மாநிலம் மைசூரில் நடைபெறும்  தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றது. இதனையடுத்து  தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பெரும் விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான தசரா திருவிழாவையொட்டி நேற்று காலை காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது கொடிப்பட்டம் ஊர்வலம் நடந்தது.


கொடி ஊர்வலம் கோவில் வந்து சேர்ந்ததும் காலை 9.30 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பின்பு கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜை நடந்தது.தசரா திருவிழா தொடங்கியதையொட்டி ஒவ்வொரு நாளும் இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சிறப்பு நிகழ்ச்சியாக தினசரி மாலை 3 மணி முதல் சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உட்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.


கோவிலில் தினசரி காலை, மதிய நேரங்களில் சிறப்பு அன்னதானமும், காலை முதல் இரவு வரை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெறும். இந்த நிகழ்வு முன்னிட்டு திரளான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்கள் விரதமிருந்து வந்து காப்பு கட்டி சென்றனர். இவர்கள் பல்வேறு விதமான வேண்டுதல் படி வித்தியாசமான வேடங்களை அணிந்து விரத காலத்தில் பொதுமக்களிடம் இருந்து காணிக்கைகள் பெற்று கோயிலில் சேர்த்து விரதம் முடிப்பார்கள். 


தசரா திருவிழா நாளான அக்டோபர் 24 ஆம் தேதி  மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும் நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம வாகனத்தில் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் எழுந்தருளும் முத்தாரம்மன் பல்வேறு உருவங்களில் வரும் மகிஷாசுரனை வதம் செய்யும் காட்சிகள் அரங்கேறும். மறுநாளான அக்டோபர் 25 ஆம் தேதி அதிகாலையில் கடற்கரை மேடையில் சிதம்பரேஸ்வரர் எழுந்தருளும் காட்சியும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெறுகிறது. மாலையில் கொடி இறக்கம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேடங்களை கலைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.