மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆதலால், இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.




இதனால் இங்கு 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதன் காரணமாக இங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம். இத்தகைய சிறப்பு மிக்க கோயிலுக்கு  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்து வரவேற்றனர். 


CM MK Stalin: மகளிருக்கான புதிய கொள்கை விரைவில் வெளியீடு - மகளிர் தின வாழ்த்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு




தொடர்ந்து, கோயிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ யாக பூஜைகளை செய்தார்.  பின்னர் கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது ராசி நட்சத்திரம் சொல்லி அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார். ஹோமம் நடைபெற்ற நூற்றுக்கால் மண்டப வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர் கோயிலுக்குள் சென்று கள்ள வர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் ஸ்ரீ அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து  வழிபட்டார்.




முதல்வர் மனைவி வருகையை ஒட்டி திருக்கடையூர் கோயில் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழ பெரும்பள்ளம் கிராமத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் வழிபாடு செய்தார்.  இங்கு மாசி மகத்தையொட்டி வரும் பெளர்ணமியான இன்று வேதவிற்பன்னர்களை கொண்டு அங்காளபரமேஸ்வரிக்கு சிறப்பு மகா சண்டிஹோமம் ஆயுள் ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின் உட்பட அவரது உறவினர்களும் கலந்துகொண்டனர் .




மகா சண்டிஹோம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நிறைவுற்று பூர்னா குதி நடைபெற்றது. பின்னர், மேள தாளம் முழங்க, சிவாச்சாரியார்கள், புனிதநீர் கலசங்களை தலைகளில் தாங்கி, கோயிலை வலம் வந்து "கோயில் கருவூலத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு அபிசேக ஆராதனை செய்தனர். இந்த ஹோமத்தில் கலந்துகொண்ட உள்ளூர் பென்களுக்கு, திருமதி துர்கா ஸ்டாலின் அவர்கள் உணவு பரிமாறி, புடவை, மாங்கல்ய பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர். வழங்கறிஞர் பன்னீர்செல்வம், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.