நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு" என்னும் புதிய பிரிவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினால் துவங்கப்பட்ட மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "போட்டித் தேர்வுப் பிரிவு", இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (07.03.2023) காலை 10.00 மணியளவில் தொடங்கப்பட்டு உள்ளது.
என்ன அம்சங்கள்?
"நான் முதல்வன்" திட்டத்தின் போட்டித் தேர்வுகள் பிரிவின் கீழ், அரசுத் தேர்வுகளான SSC, Railway, Banking, UPSC, TNPSC, Defence போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தமிழ்நாடு முழுவதும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இத்திட்டம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே துவங்கப்பட்டு உள்ளது.
இப்போட்டித் தேர்வு பிரிவில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுக முடியும்.
அரசுப்பணி ஒன்றையே கனவாகக் கொண்டுள்ள ஆயிரம் ஆயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.மத்திய அரசுப் பணி போட்டித் தேர்வுகளில் தமிழர்களின் பங்கேற்பை கணிசமான அளவில் அதிகரித்து வெற்றி பெறச் செய்வதோடு மட்டுமல்லாமல் கூடிய விரைவில் ஐஐடி, என்.ஐ.டி, தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள், அகில இந்திய மருத்துவ நிறுவனம் ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் பயிலும் வண்ணம் குமரி முதல் இமயம் வரை நம் அறிவை விரிவு செய்ய இத்திட்டம் விசாலப் பாதை வகுக்கும் என்ற நோக்கத்தையும் கொண்டு "நான் முதல்வன்" போட்டித் தேர்வுகள் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கி அவர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் மற்றும் ஆண்டு தோறும் 10 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற தொலைநோக்குடன் தமிழ்நாடு முதலமைச்சரால் துவங்கப்பட்ட ஓராண்டில் 483 அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மூலம் 4- இலட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவியர்கள் மற்றும் 785- கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சார்ந்த 8 லட்சத்து 10ஆயிரம் மாணவ மாணவியர்களுக்கு தொழில் சார்ந்த திறன்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, இரயில்வே போன்ற துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 1.50 இலட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச்சார்ந்தவர்கள் மிகவும் குறைவு என்பது வருத்தமளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். அண்மையில் பிரதமரைச் சந்தித்தபோது தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளேன்.
அண்ணனாக துணை நிற்பேன்
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் அனைத்து நிலைகளிலும் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்ற நிலை வர வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு மையங்கள் உள்ளன. கிராமப்புற மாணவர்களால் கூடுதல் கட்டணம் செலுத்தி இத்தகைய பயிற்சிகளை பெற முடியாது. இந்த நிலையை மாற்றி கட்டணமின்றி போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளை அளித்திட நம் முதல்வர் அவர்கள் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கெனவே மாணவர்களுக்கு தெரிவித்தவாறு, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு தாயாக , தந்தையாக துணை நிற்பார். உழைத்தால் வெற்றி பெறலாம். நான் என்றும் உங்களின் அண்ணனாக துணை நிற்பேன்’’ என்று அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
இந்த தொடக்க விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மை செயலர் உதயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.