திருப்பூர், கோவையில் புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்த குழுவினர் தலைமை செயலாளர் சந்திக்க சென்னை வந்தனர். அதன்பிறகு தலைமை செயலாளர் இறையன்பை சந்தித்த பிறகு பீகார் அதிகாரிகள் குழு பேட்டியளித்தனர்.


அப்போது, பீகார் மாநில ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பாலமுருகன் அளித்த பேட்டியில், “அதிகாரிகள் மட்டுமின்றி தொழில்துறை பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினோம். கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளோம். திருப்பூரில் 3 இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். தொழிலாளர்களின் அனுமதியுடன் அவர்களது செல்போன்களையும் ஆய்வு செய்தோம். பீகாரில் இருந்து வந்து 30 ஆண்டுகள், 15 ஆண்டுகளாக பணிபுரிபவர்களும் உள்ளனர்.புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தர தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. பீகார் அரசு சார்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்” என தெரிவித்தார்.