தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். மேலும் காலை நேரத்தில் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. தற்போது மார்கழி மாதம் என்பதால் மழை பொழிவு குறைந்து வறண்ட வானிலை தோன்றுகிறது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை முதல் 2ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சென்னையில் மழை இல்லாத நிலையில் கடந்த சில தினங்களாக காலை வேலையில் பனிமூட்டமாக காணப்படுகிறது. இன்று அதிகாலை முதல் 7 மணி வரை கடும் பனி நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் பெங்களூரு மற்றும் கோவைக்கு திருப்பி விடப்பட்டது.
இந்த சூழலில் வறண்ட வானிலை இருக்கும் என்பதால் அடுத்து வரும் நாட்களில் காலை பொழிதில் பனிமூட்டம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நேற்று காலை வரை பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஊத்து (திருநெல்வேலி) 9, மாஞ்சோலை (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 6, நம்பியார் அணை (திருநெல்வேலி 5, கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி) 3, ராமநதி அணைப்பிரிவு (தென்காசி), நாலுமுக்கு (திருநெல்வேலி, பாபநாசம் (திருநெல்வேலி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.