SIR Draft Electoral Roll: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடிப்படையிலான,  வரைவு வாக்காளர் பட்டியலில் 1 கோடி பேர் வரை நீக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Continues below advertisement

வரைவு வாக்காளர் பட்டியல்:

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து,  விரைவில் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு  உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இரண்டாவது கட்டமாக இந்த நடைமுறையை செயல்படுத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த நவம்பர் 4ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. வாக்குச்சாவடி முகவர்க வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெற்று வாக்காளர்களின் அடையாளங்களை உறுதி செய்தனர். ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், களத்தில் இருந்த சிக்கல்கள் காரணமாக இரண்டு முறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

Continues below advertisement

1 கோடி பேர் காலி?

போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருப்பவர்கள், இறந்துபோனவர்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் நோக்கம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலின்படி 6.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இந்நிலையில் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடிப்படையில் இன்று வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 15.2 சதவிகிதம் அதாவது கிட்டத்தட்ட 1 கோடி பேர் நீக்கப்பட்டு 5.44 கோடி வாக்காளர்கள் இருப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது கட்டமாக தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எங்குமே இல்லாத அளவில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என தெரிகிறது.

சென்னையில் மட்டும் 15 லட்சம் பேர்?

மாவட்ட வாரியாக கருத்தில் கொண்டால், சென்னையில் அதிகபட்சமாக பழைய வாக்களர் பட்டியலில் இருந்த 35.6 சதவிகிதம் பேர் நீக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது பழைய வாக்காளர் பட்டியலில் இருக்கும் 40 லட்சம் பேரில் இருந்து, சுமார் 25 லட்சம் வாக்காளர்களாக எண்ணிக்கை குறையக்கூடும். இதற்கான காரணங்களில் நிரந்தரமாக வேறொரு பகுதிக்கு குடியேறியதே பிரதானமானதாக கூறப்படுகிறது. 

பொதுமக்களுக்கான வாய்ப்புகள் என்ன?

வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்றும், வரைவுப் பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் செயல்முறையின் போது சேர்க்கப்படலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதன் முடிவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. வரும் ஏப்ரல் - மே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் இந்த திருத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.