SIR Draft Electoral Roll: தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலில், உங்கள் பெயர் இருப்பதை அறிவதற்கான வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல்:
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இரண்டாம் கட்டமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியது. ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பணிகள் நடைபெற்ற நிலையில், ஏற்கனவே ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்நிலையில், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிவது எப்படி என்பது பலரின் பிரதான கேள்வியாக உருவெடுத்துள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் - பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி?
வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா? இல்லையா? என்பதை பொதுமக்களே எளிதாக அறிவதற்கு தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் Voters.eci.gov.in என்ற இணையதள முகவரியை அணுகி, உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து, உங்களது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்களது பெயர் அந்த பட்டியலில் இல்லாவிட்டால், நீக்கப்பட்டதற்கான காரணங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளங்கள் வாயிலாக அறியலாம்.
பெயர் இல்லாவிட்டால் என்ன செய்வது?
ஒருவேளை வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லாவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்றும், வரைவுப் பட்டியலில் விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் செயல்முறையின் போது சேர்க்கப்படலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி,
- பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18ம் தேதி வரை தெரிவிக்கலாம்
- இடம் மாறியவர்கள் படிவம் 8, புதியதாக பெயர் சேர்ப்பவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்க வேண்டும்.
அவற்றை அதிகாரிகள் பரிசீலனை செய்து ஆவணங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டால், உங்களது பெயர் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறக்கூடும்.
97 லட்சம் பேர் நீக்கமா?
போலி வாக்காளர்கள், இரட்டை வாக்குரிமை கொண்டிருப்பவர்கள், இறந்துபோனவர்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதே, சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளின் நோக்கம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2025ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலின்படி 6.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இந்நிலையில் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் அடிப்படையில் இன்று வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 15.2 சதவிகிதம் அதாவது கிட்டத்தட்ட 97 லட்சம் பேர் நீக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, மாநில வாக்காளர்களின் எண்ணிக்கை 5.44 கோடியாக குறையலாம். இரண்டாவது கட்டமாக தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எங்குமே இல்லாத அளவில் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுவர் என தெரிகிறது.