சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 66வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது நினைவை போற்றும் வகையில் திருஉருவ சிலை நிறுவப்பட்டுள்ளது.
மனித சமூகம் முன்னேற உதவுவதற்கான மகத்தான கருவி கல்வி. அப்படிப்பட்ட கல்வியை கொண்டு நாட்டையே சீரமைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டிய உதாரணம் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமானால் அதை கல்வியை கொண்டு தான் செய்ய முடியும் என ஆணித்தரமாக நம்பியது மட்டுமல்லாமல் செய்தும் காட்டிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று
கல்விதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆயுதம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்த கல்வி தன்நலன், தன் குடும்பம் என சுருங்கி விட்டால் அந்த கல்வியின் முழுமையான பயன் நம் சமூகத்திற்கு கிடைக்காமல் போய்விடும். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து மனிதராய் பிறந்த அனைவரும் சமம் என்று சொல்ல கல்வியை பயன்படுத்தலாம் என எடுத்துக்காட்டியவர் அம்பேத்கர். அவரது கல்வியறிவுக்கும், வாசிப்பு பழக்கத்திற்கும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை கிடைத்திருக்கும். ஆனால் தான் கற்ற கல்வி என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். வாழ்ந்தும் காட்டினார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. உடன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் , மத்திய இணையமைச்சர் எல்.முருகன் என முக்கிய பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஏற்கனவே, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், திருவள்ளுவர், ஒவ்வையார் , மகாகவி பாரதியார் ஆகியோரின் நினைவை போற்றும் வகையில் உருவ சிலை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
‘டாக்டர் அம்பேத்கரின் எண்ணங்களும் லட்சியங்களும் மக்களுக்கு தொடர்ந்து வலிமையைத் தருகின்றன. நம் தேசத்திற்காக அவர் கண்ட கனவுகளை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்’ என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ” ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் #BabaSahebAmbedkar-இன் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்! என பதிவிட்டுள்ளார்.
இதே போல் சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் ஒட்டி சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, குஷ்பூ, வைகோ, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
Seeman: புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு அம்பேத்கர் பெயர் வைக்க வேண்டும் - சீமான் கோரிக்கை