இந்திய அரசின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழக முழுவதும் டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




இதனைத் தொடர்ந்து கரூர் ஜவஹர் பஜார் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு பட்டியலின விடுதலைப் பேரவை தமிழ்நாடு நிறுவனத் தலைவர் தலித் ஆனந்தராஜ் தலைமையில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவரது திருவுருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மலர்கள் தூவி, உறுதிமொழி ஏற்று, புகழஞ்சலி செலுத்தினர். 




இந்நிகழ்வில் மாநில பொருளாளர் தனபாலன், மாநில மகளிர் அணி செயலாளர் பாக்கியம் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியின் நிறைவில் செய்தியாளரிடம் தெரிவித்த  ஆனந்தராஜ், ”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கருக்கு கரூரில் சிலை வைக்க வேண்டும் என பல வருடங்களாக மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால்,  மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருக்கிறது. அனைத்து தலைவர்களுக்கும் இங்கு சிலை வைக்கப்பட்டு இருக்கும்போது, அம்பேத்கருக்கு மட்டும் சிலை வைத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதை ஏற்க இயலாது” என தெரிவித்தார். 




மேலும், ”பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் தொடர்ந்து வெடி வைப்பதால் வீடுகள் விரிசல் விழுந்து விடுகிறது. இதனால் வீட்டில் வசிக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. இது போன்ற சூழலில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் குவாரி உரிமையாளர்களுக்கு உறுதுணையாக செயல்படுவது வேதனை அளிக்கிறது. சட்டமன்ற உறுப்பினரை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், அந்தக் குழு செயல்படுகிறதா என சந்தேகம் ஏற்படுகிறது. தமிழக முதலமைச்சர் இது றித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.




கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று இந்திய சட்ட மாமேதை பாரத ரத்னா டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.