Seeman: புதிதாக கட்டப்படும் பாராளுமன்ற கட்டிடத்துக்கு மறைந்த அரசியல் அமைப்புச் சாசன நிறுவனர் அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த அரசியல் அமைப்புச் சாசன நிறுவனர் அம்பேத்கரின் நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், இயக்கத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் அவரது சிலை , புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள, அம்பேத்கர் திடலில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
நாட்டின் அடையாளமாக இருப்பது, அண்ணல் அம்பேத்கர் தான். அவரது பெயரை புதிதாக கட்டப்படும் நாட்டின் பாராளுமன்ற கட்டிடத்துக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம் என பேசியுள்ளார். மேலும், அவர் பேசுகையில், நாட்டின் அடையாளம் என்றால் அது, அம்பேதகர் தான். ஆனால் நம் நாட்டை விட்டு வெளியே சென்று விசாரித்தால் வல்லபாய் பட்டேல் யாரென்று தெரியாது. ஆனால் அவரது சிலை 3 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படுகிறது. பட்டேலை பற்றி மலேசியாவில் விசாரித்தால் தெரியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அம்பேத்கர்...
மனித சமூகம் முன்னேற உதவுவதற்கான மகத்தான கருவி கல்வி. அப்படிப்பட்ட கல்வியை கொண்டு நாட்டையே சீரமைக்க முடியும் என்று வாழ்ந்து காட்டிய உதாரணம் அண்ணல் அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டுமானால் அதை கல்வியை கொண்டு தான் செய்ய முடியும் என ஆணித்தரமாக நம்பியது மட்டுமல்லாமல் செய்தும் காட்டிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று.
கல்விதான் ஒரு மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆயுதம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அந்த கல்வி தன்நலன், தன் குடும்பம் என சுருங்கி விட்டால் அந்த கல்வியின் முழுமையான பயன் நம் சமூகத்திற்கு கிடைக்காமல் போய்விடும். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்து மனிதராய் பிறந்த அனைவரும் சமம் என்று சொல்ல கல்வியை பயன்படுத்தலாம் என எடுத்துக்காட்டியவர் அம்பேத்கர். அவரது கல்வியறிவுக்கும், வாசிப்பு பழக்கத்திற்கும் ஆடம்பர சொகுசு வாழ்க்கை கிடைத்திருக்கும். ஆனால் தான் கற்ற கல்வி என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பயன்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். தான் கற்ற கல்வியின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்கு அரசியல் அதிகாரம் தான் தீர்வு எனச் சொன்னது மட்டும் இல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் அர்சியல் அதிகாரத்தினை அடைவதற்கான அனைத்து வழிகளையும் ஏற்படுத்திச் சென்றவர் அம்பேத்கர்.