இஸ்ரோ, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனமா? அல்லது பாஜக-ஆர்எஸ்எஸ் போன்ற “வழிபாட்டு தல இடிப்பாளர்களின்” பணத்தில் இயங்கும் நிறுவனமா என பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 






அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் சாட்டிலைட் புகைப்படத்தை கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரோ வெளியிட்டது. விண்ணில் இருந்து ராமர் கோயில் என்ற வாசகத்துடன் இந்த படம் வெளியிடப்பட்டது. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படத்தில் தஷ்ரத் மஹால், சராயு நதி ஆகியவை இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையத்தின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.






இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பூவுலகின் நண்பர்களை சேர்ந்த சுந்தராஜன் தனது எக்ஸ் பக்க தளத்தில் “சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை பொழிவின் அளவை கணித்து சொல்வதற்கு தேவையான தரவுகளை தரமுடியாத இஸ்ரோ  இன்று இராமர் கோயிலின் படத்தை வெளியிடுகிறது. 


இஸ்ரோ, இந்திய மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் நிறுவனமா அல்லது பாஜக-ஆர்எஸ்எஸ் போன்ற “வழிபாட்டு தல இடிப்பாளர்களின்” பணத்தில் இயங்கும் நிறுவனமா? என பதிவிட்டுள்ளார்.  


ராமர் கோயிலை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.இந்தியாவின் அனைத்து துறைகளின் பிரபலங்களும், பல மாநில முதலமைச்சர்களும், பல மாநில ஆளுநர்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.