கொரோனா நோயாளியின் உறவினரை தாக்கிய மருத்துவர், சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்!


மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் இறந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை தேடிவந்த உறவினருக்கும், கொரோனா வார்டில் பணியில் இருந்த மருத்துவருக்கும் தகராறு. உறவினரை மருத்துவர் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரல். சம்பவம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை!


கொரோனா வைரஸ் தொற்று பல்வேறுவிதமான பாதிப்புகளை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என பலதரப்பட்டவர்களும் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு இடங்களில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே பிரச்சனை, மருத்துவர், செவிலயர் தாக்குதல் சம்பவங்கள், நோயாளிகள் தற்கொலை செய்து கொள்வது  போன்ற செய்திகள் தற்போது அன்றாட நிகழ்வாகி உள்ளது. எல்லாவற்றிக்கும் மேலாக மன நலமருத்துவா்களால் தீர்க்க முடியாத அளவிற்கு தற்போது மன அழுத்த நோய் கொரோனாவை தாண்டி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.



மருத்துவர் தாக்கும் காட்சி


 


இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் கடந்த 10 ஆம் தேதி சிகிச்சையில் இருந்த மயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (61) என்பவர் கழிவறைக்கு சென்றபோது கழிவறையை மயங்கி விழுந்து உயிரிழந்தார். 


கழிவறையிலேயே பலமணிநேரம் கிடந்த உடலை அப்புறப்படுத்தவில்லை என்றும், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் உடலை வார்டிலிருந்து அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டுவதாக கொரோனா நோயாளிகள் வீடியோ பதிவிட்டு குற்றம் சாட்டியிருந்தனர்.


இந்நிலையில் கழிவறையில் இறந்துபோன கொரோனா நோயாளி ராஜேந்திரனின் உறவினர் பேரளம் பகுதியை சேர்ந்த ஆலந்தூர் ரவி என்பவர் இன்று மருத்துவமனைக்கு வந்து, இறந்த ராஜேந்திரனின் ஆதார் கார்டு, ஏடிஎம் கார்டு, செல்போன், மற்றும் 2 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வைத்திருந்ததாக கூறி அவரின் உடைமைகளை பணியில் இருந்த அறுவை சிகிச்சை மருத்துவர் சுகுந்தனிடம் கேட்டுள்ளார்.  



மருத்துவரால் தாக்குதலுக்கு உள்ளான நபர்


இதுதொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பானது. இதில் மருத்துவர் சுகுந்தன் இறந்த கொரோனா நோயாளியின் உறவினரை காவல்துறையினரின் தடுப்பையும் மீறி தாக்கியுள்ளார்.  தற்போது அந்த  வீடியோ காட்சிகள் வாட்ஸ்அப்பில் பதிவிடப்பட்டு வைரலாகிவருகிறது.


இந்த சூழலில் இச்சம்பவம் குறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் ரவியை மயிலாடுதுறை காவல்நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும் இறந்த கொரோனா நோயாளியின் உறவினர் ரவி தன்னை தாக்கியதாக கூறி மருத்துவர் சுகுந்தன் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் முன்பு மருத்துவர் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.