தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் கடந்த 10-ந் தேதி தேதி முதல் மாநிலம முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.




இந்த நிலையில், மருத்துவ துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் மருத்துவர் ஆர்.கே.ருத்ரன், கொரோனா பரவலை அதிகரிப்பை எச்சரித்து முகநூல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அவரது முகநூல் பக்கத்தில், “பரவலின் தீவிரம் (அரசு அறிவித்தபடி)

26/3/21- தமிழ்நாட்டில் மொத்தம் 1,971, சென்னையில் 720


1/4/21- தமிழ்நாட்டில் 2,817, சென்னையில் 1,083


11/4/21 தமிழ்நாட்டில் 6,583, சென்னையில் 2,124 .


தொற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்க, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. இனியும் திமிராய்த் திரிந்தால்- மரணங்கள் கூடுவது மட்டுமல்ல, மீண்டும் வாழ்க்கை தடம்புரளும். முகக்கவசம், எட்டியிருத்தல், அவசியமின்றி வெளியே செல்லாதிருத்தல்- இன்னும் இரண்டு மாதங்கள் கவனமாய் இருந்தால் தப்பிக்கலாம். இல்லையெனில் இன்னும் ஒரு வருடத்திற்கு மேலாகிவிடும் இயல்பு வாழ்க்கை மீள.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் கடந்த 10 நாட்களில் 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த புதன்கிழமை 600 ஆக இருந்த கொரோனா கட்டுப்பாடு பகுதிகள், இன்று 1,106 ஆக உயர்ந்துள்ளது.