பெண்கள் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள ஐ-பிரஸ்ட் கருவி மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர் ஜே.எஸ் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் லைஃப் லைன் பன்நோக்கு மருத்துவமனை சார்பில் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது பேசிய லேப்ரோஸ்கோபிக் மற்றும் பீடியாட்ரிக் நிபுணர் மருத்துவர் ஜெ.எஸ். ராஜ்குமார், ”மார்பக புற்றுநோய் தற்போது வேகமாக பரவி வருவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களில் ஒருவர் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்கிறார்" என்றும் தெரிவித்தார்.
மார்பக புற்றுநோய்:
”குறிப்பாக கர்ப்பப்பை புற்றுநோயை பின்னுக்குத் தள்ளி மார்பக புற்றுநோய் அதிக அளவில் பெருகி வருவதாக தெரிவித்த அவர், உலகில் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார் என்றார். மேலும் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் இரண்டு பெண்களில் ஒருவர் உயிரிழக்கிறார் என்றும், அதற்கு மார்பகப் புற்றுநோய் பாதிப்பு தாமதமாக கண்டறியப்படுவதே காரணம்" என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அல்ட்ராசவுண்ட், மேமோகிராபி மற்றும் எம்ஆர்ஐ போன்ற சோதனைகள் அதிகளவு மக்கள் தொகையுடைய இந்தியா போன்ற நாடுகளுக்கு போதிய பலன் தருவதில்லை என்பதால் ஐ-பிரஸ்ட் கருவி சோதனையை எளிதாக்குகிறது. இது முற்றிலும் வலியற்றது மற்றும் கதிர்வீச்சு இல்லாதது என்பதோடு மார்பக கட்டிகளை முன்கூட்டியே கண்டறியவும் உதவுகிறது. 5 நிமிடங்களில் அனைத்து வயது பெண்களுக்கும் சோதனை செய்யும் வகையில் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு:
துரித உணவுகள் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி பெண்களுக்கு பாலின உட்புறத்தில் செயல்பாட்டை தீவிரப்படுத்துவதாகவும் இதன் காரணமாக மார்பக புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார். மேலும் 2050 ஆம் ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மார்பக புற்று நோய் பாதிக்கப்பட்டவர் இருக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும் என உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ கழகம் ஆகியவை எச்சரித்துள்ளதையும் சுட்டிக்காட்டி அவர், தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் இலவசமாக மார்பக புற்றுநோய் முகாம் நடந்தியதில் 3000 பெண்களில் சுமார் 120 பேருக்கு இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த சோதனைகளுக்கு ஐ-ப்ரஸ்ட் கருவியை பயன்படுத்தியதாகவும் இதனால் நேரம் மற்றும்செலவுகள் வெகுவாக குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதில் Ms.J.ஜெயவாணி, தலைமை ஊட்டச்சத்து நிபுணர் செல்வி வித்யா, ரோட்டரி கிளப் தலைவர் சென்னபட்னா, லைப்லைன் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர்.ஜே.எஸ்.ராஜ்குமார், டாக்டர்.அனிருத் ராஜ்குமார், லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் சர்ஜன் டாக்டர்.சுசித்ரா, உளவியலாளர் உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.