கார்த்திகை தீபம் வரும் ஞாயிற்றுக் கிழமை அதாவது நவம்பர் மாதம் 26ஆம் தேதி வழக்கமான பிரமாண்டமான ஏற்பாடுகளுடனும் பாதுகாப்புடனும் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் இருந்து தமிழ்நாடு அரசு  படுக்கை வசதி கொண்ட சிறப்பு ஏ.சி பேருந்துகளை இயக்கவுள்ளதாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு பேருந்துகள் நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


இந்த சிறப்பு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு விரைப்பேருந்து போக்குவரத்துக்கழக இணையதளத்தில் முன்பதிவு செய்துள்ளலாம். இந்த பேருந்துகள் அந்தந்த நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்வதுடன், திருவண்ணாமலையில் இருந்தும் அந்தந்த நகரங்களுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 


இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


திருவண்ணாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தீப திருநாள் 26/11/2023 அன்றும் மற்றும் 27/11/2023 அன்று பௌர்ணமி தினமானதாலும் தீபத்தை காணவும் மற்றும் கிரிவலம் செல்லவும் பல லட்சம் பொது மக்கள் திருவண்ணாமலைக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் காரணமாக திருவண்ணாமலைக்கு தன் சொந்த வாகனங்களில் செல்லும் போது அதிக [போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது இதனை தவிர்க்கும் பொருட்டு சொகுசாக பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பயன்படுத்த,  25/11/2023 , 26/11/2023, 27/11/2023  ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ஐம்பது எண்ணிக்கையிலான குளிர் சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளது . இப்பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


மேலும் திருநெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி , மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலை சென்று வர சிறப்பு பேருந்துகள் 24/11/2023 முதல் 26/11/2023 வரை இயக்கப்பட உள்ளது ” என குறிப்பிடப்பட்டுள்ளது. 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஆரம்ப விழா எண்ணற்ற பக்தர்களுக்கு மத்தியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. 


கார்த்திகை மாதம் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கியது. எப்படி இந்த மாதம் சபரிமலை சீசன் என சொல்லப்படுகிறதோ, அதற்கு ஈடாக திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பஞ்சபூத தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் அருணாசலேஸ்வரர் கோயில் இந்தாண்டுக்கான கார்த்திகை தீப திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


நடப்பாண்டில் திருக்கார்த்திகை வரும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை கோயிலில் எப்போதும் 10 நாட்கள் தீபத்திருவிழா நடைபெறும். அதன்படி நவம்பர் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழாவானது தொடங்குகியது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் 23 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி நிறைவு நாளன்று பரணி தீபமானது 2668 அடி உயர மலை உச்சியில் பக்தர்களின் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோசத்துடன் ஏற்படவுள்ளது. 


அதேசமயம் கொடியேற்றத்துக்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வ உற்வசத்துடன் தான் தீபத்திருவிழா தொடங்கியது. அதன்படி கடந்த நவம்பர் 14ஆம் தேதி இரவு திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை அம்மன் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் நவம்பர் 15ஆம் தேதி அதாவது புதன்கிழமை அருணாசலேஸ்வரர் கோயிலின் 3வது பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.